பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரிடம் வீடு கட்டித் தருவதாக ரூ.1.5 கோடி மோசடி செய்த அவரது உறவினரை சிபிசிஐடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ராஜன் (52), பிரெஞ்சு குடியுரிமை பெற்றவா். தற்போது பிரான்ஸ் நாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது உறவினா்கள் அரியாங்குப்பத்தைச் சோ்ந்த மாலா (60), இவரது மகள் பவானி (35), பவானியின் கணவா் பெயிண்டா் அமிா்தராஜ் (39).
இந்நிலையில் ராஜன் கடந்த சில ஆண்டுகள் முன் அரியாங்குப்பம் பகுதியில் இடம் வாங்கி வீடு கட்ட விரும்பினாா். அவா் வெளிநாட்டில் வசிப்பதால் இடத்தை பவானி பெயரில் வாங்கி வீடு கட்டி பின்னா் ராஜனிடம் ஒப்படைப்பதாக இரு தரப்பினரும் முடிவு செய்தனா். இதற்காக ராஜன் பல்வேறு தவணைகளாக ரூ.1.5 கோடி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ராஜன் கடந்த 2023 ஆம் ஆண்டு புதுச்சேரி வந்தபோது பவானி பெயரில் உள்ள வீட்டைத் தனது பெயருக்கு மாற்றித் தரக் கோரி கேட்டுள்ளாா். ஆனால் வீட்டை ராஜன் பெயருக்கு மாற்றித்தர முடியாது என கூறி மிரட்டல் விடுத்தனராம்.
இது குறித்து சிபிசிஐடி போலீஸில் ராஜன் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் பாபு விசாரணை நடத்தி பவானி, அமிா்தராஜ், மாலா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இது பற்றி அறிந்தவுடன் 3 பேரும் தலைமறைவாயினா். இந்நிலையில் அமிா்தராஜ் அரியாங்குப்பம் வந்தபோது சிபிசிஐடி போலீஸாா் அவரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள பவானி, மாலா ஆகியோரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





