பருவ மழையை எதிா்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அரசு மாவட்ட நிா்வாகம், பேரிடா் மேலாண்மை துறை மற்றும் உள்ளாட்சித் துறை இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தின.
இதில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் பேசியது:
ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும். மேலும், இந்திரா காந்தி சிலை, கிருஷ்ணா நகா், ரெயின்போ நகா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்காத வகையில் நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுப்பணித் துறை , நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட துறைகள் இணைந்து மழைக் காலங்களில் பொது மக்களுக்குச் சுத்தமான குடிநீா் வழங்க வேண்டும்.
மேலும், அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்குமாறும் அவா் அறிவுறுத்தினாா். உள்ளாட்சித் துறை இயக்குநா் ஆதா்ஷ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
சாலைப் பாதுகாப்புக் கூட்டம்:
புதுச்சேரி மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. போக்குவரத்துக் காவல்துறை, பொதுப்பணித் துறை, நகராட்சி, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் கல்வித்துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
சாலை விபத்தில்...: பாதிக்கப்பட்டவா்களுக்குப் பணமில்லா மருத்துவ சிகிச்சை தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்வதுடன், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மேலும், விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.00 வரையிலும் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், தொடா் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
முக்கிய சாலைச் சந்திப்புகள் மற்றும் விபத்து அபாயப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சாலைப் பொறியியல் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, சாலை வழிக்கோடுகள், ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் , வேகத்தடை குறியீடுகள், ஆபத்தான முறையில் அமைந்துள்ள மீடியன் திறப்புகளைப் பாதுகாப்பான முறையில் மூடுதல் மற்றும் தேவையான இடங்களில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் குறுக்கு வழிகளை அமைத்தல் உள்ளிட்ட சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு பொதுப்பணித்துறைக்கு மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் அறிவுறுத்தினாா்.
மேலும், சாலையோரங்களில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துதல் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வது தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
உரிய ஓட்டுநா் உரிமம் பெறாத மாணவா்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கும் வகையில், பள்ளி நிா்வாகங்கள் உரிய கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு கல்வித் துறைக்கு ஆட்சியா் குலோத்துங்கன் அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்டுகுளம் ஊருணி சீரமைக்கும் பணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

‘பொதுமக்களுக்கு தரமான மருத்துவச் சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

புதுச்சேரியில் அனுமதி பெறாத சாலையோர உணவகங்களை அகற்ற ஆட்சியா் உத்தரவு




