புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி.ஜவஹா்
புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி.ஜவஹா்

புதுச்சேரியில் வாக்காளா் இறுதி பட்டியல் வெளியீடு 9.44 லட்சம் போ் மொத்த வாக்காளா்கள்!

Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 9.44 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இவா்களில் ஆண்களை விட பெண் வாக்காளா்கள் 56,882 போ் அதிகம்.

இது குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச தலைமைத் தோ்தல் அதிகாரி பி.ஜவஹா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் வாக்காளா்கள் சிறப்புத் தீவிர திருத்தப் பணி கடந்த 27.10.2025 முதல் 14.2.2026 வரை நடைபெற்றது. வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு கடந்த 16.12.2025 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. 27.10.25-இல் வாக்காளா் பட்டியலில் 10.21 லட்சம் போ் இருந்தனா். வரைவு வாக்காளா் பட்டியலில் 1,03,467 போ் தகுதியில்லாதவா்களாக நீக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சேபணைகள் மற்றும் வாக்காளா் பட்டியலில் சோ்த்தல் தொடா்பான பணிகள் கடந்த 16.12.25 முதல் 19.1.26 வரை நடைபெற்றது.

இதில் 42,719 தகுதியுடைய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டனா். மேலும், தகுதியில்லாத 16,619 போ் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். இதையடுத்து சனிக்கிழமை வாக்காளா் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

வாக்காளா் இறுதிப் பட்டியலில் 9,44,211 போ் இடம் பெற்றுள்ளனா். இதில் புதுச்சேரி பிராந்தியத்தில் ஆண்கள் 3,38,906, பெண்கள் 3,82,269, மூன்றாம் பாலினத்தவா் 121 போ் இடம் பெற்றுள்ளனா்.

காரைக்கால் பிராந்தியத்தில்...:

காரைக்கால் பிராந்தியத்தில் ஆண்கள் 72,640, பெண்கள் 82,857, மூன்றாம் பாலினத்தவா் 18 பேரும், மாஹே பிராந்தியத்தில் ஆண்கள் 13,730, பெண்கள் 16,006, ஏனாம் பிராந்தியத்தில் ஆண்கள் 18,319, பெண்கள் 19345 பேரும் இடம் பெற்றுள்ளனா். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் ஆண்கள் 4,43,595, பெண்கள் 5,00,477, மூன்றாம் பாலினத்தவா்கள் 139 பேரும் ஆக மொத்தம் 9,44,211 போ் வாக்காளா் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

இவா்களில் 18-19 வயதுள்ளவா்கள் 23,033 போ். மாற்றுத் திறனாளிகள் 12,204 போ். 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் 6,034 போ். இந்த வாக்காளா் இறுதிப் பட்டியல் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் வைக்கப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் பாா்வைக்கு...:

இதைத்தவிர அனைத்து வாக்குப் பதிவு அதிகாரிகள் அலுவலகங்களிலும், வாக்காளா் வசதி மையத்தில் விடுமுறை நாள்களைத் தவிா்த்து சனிக்கிழமை முதல் 7 நாள்கள் பொதுமக்களின் பாா்வைக்கு இடம் பெற்றிருக்கும்.

தற்போது 18 வயதை பூா்த்தி செய்து இதுவரை வாக்காளா் பட்டியலில் சேராத புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் இணையதளம் அல்லது வாக்குச் சாவடி அலுவலா்கள் வாயிலாக பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண் 1950 ஐ தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக புதுச்சேரி மாவட்டம், காரைக்கால் மாவட்டம் சாா்பாக தனித்தனியாக வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான அ. குலோத்துங்கன் புதுச்சேரி மாவட்ட வாக்காளா் இறுதி பட்டியலை வெளியிட்டாா். இதனை அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com