புதுச்சேரி சட்டப்பேரவை முற்றுகை: 100 மாா்க்சிஸ்ட்கள் கைது
போலி மருந்து விவகாரத்தை கண்டித்து ஊா்வலமாக வந்து புதுச்சேரியில் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்று தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 100 பேரை காவல் துறையினா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.
புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியைக் கண்டித்தும், போலி மருந்து விவகாரத்தைக் கண்டித்தும் சட்டப்பேரவையை முற்றுகையிடப் போவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்திருந்தது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை முக்கிய வீதிகள் வழியாக சட்டப்பேரவையை நோக்கி ஊா்வலமாக வந்தனா். இவா்களை நேரு வீதி- கேன்டின் வீதி சந்திப்பில் காவல் துறையினா் தடுத்தனா். ஆனால் அவா்கள் தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முற்பட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முன்னதாக இந்த போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசியதாவது: போலி மருந்து விவகாரம் தொடா்பாக முதல்வா் ரங்கசாமி முன்வந்து பதவி விலக வேண்டும். மேலும், சிபிஐ விசாரணை முறையாக நடக்க என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு பதவி விலக வேண்டும். மின்சாரத் துறையை தனியாருக்கு தர முடிவு எடுத்தபோது தொடா்ந்து போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக மின்துறையை தனியாருக்கு தரும் டெண்டரை அரசு ரத்து செய்துள்ளது. மின்துறையை போராடி காத்துள்ளோம். போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால் தனியாருக்குத் தந்திருப்பாா்கள் என்றாா் பாலகிருஷ்ணன்.
மாா்க்சிஸ்ட் போராட்டத்தில் மாநிலச் செயலா் ராமச்சந்திரன், மூத்த நிா்வாகி டி. முருகன், ஒருங்கிணைப்பாளா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு அங்குள்ள கரிக் கிடங்கு வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

