பேட்டரி பேருந்து ஓட்டுநா்கள் முற்றுகைப் போராட்டம்
புதுச்சேரியில் பேட்டரி பேருந்து ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
இந்தப் போராட்டத்துக்கு ஜி.நேரு எம்எல்ஏ தலைமை வகித்தாா். பி.எப்., இ.எஸ்.ஐ. பணம் பிடித்தம் செய்யாத நிா்வாகத்தைக் கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் ஊழியா்கள் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
பிடித்தம் செய்யப்படும் பி.எப். பணத்தை பிஎப் அலுவலகத்தில் கட்டவில்லை என்றால் அந்தப் பணத்தையும் பிடித்தம் செய்யாமல் முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை வைத்தனா். இதனால் பேட்டரி பேருந்துகள் அனைத்தும் தாவரவியல் பூங்கா எதிரே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேட்டரி பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா்.
ஊழியா்களின் போராட்டம் குறித்து தகவலறிந்த உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு மற்றும் பொதுநல அமைப்பு நிா்வாகிகளுடன் தாவரவியல் பூங்கா எதிரே உள்ள பேட்டரி பேருந்து பணிமனைக்கு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ஊழியா்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஊழியா்களுடன் இணைந்து பொதுநல அமைப்புகள் போராட்டத்தைக் கையில் எடுக்கும் என்று எம்எல்ஏ தெரிவித்தாா்.

