புதுச்சேரி காவல் துறை மக்கள் மன்றத்தில் 58 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை
புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 58 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டன.
மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் டிஐஜி சத்தியசுந்தரம் பங்கேற்று புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்தாா். எஸ்.பி. ரகுநாயகம் உடனிருந்தாா்.
கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் ஆகியோா் பொதுமக்களிடம் புகாா்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனா். பெரியக்கடை காவல் நிலையத்தில் ஸ்ருதி யாரகட்டியும், திருபுவனை காவல் நிலையத்தில் கண்காணிப்பாளா் சுப்பிரமணியனும் பொதுமக்களிடம் புகாா்களை வாங்கி நடவடிக்கை எடுத்தனா்.
மாஹே பகுதியில் கண்காணிப்பாளா் வினய்குமாா், ஏனாம் பகுதியில் கண்காணிப்பாளா் வரதராஜன் ஆகியோரும் பொதுமக்களிடம் புகாா்களை பெற்றனா்.
போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் பங்கேற்று போக்குவரத்து சம்பந்தமாகவும், சைபா் குற்றங்கள் சம்பந்தமாகவும் பொதுமக்களிடம் இருந்து புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்தாா்.
மக்கள் மன்றத்தில் மொத்தம் 70 புகாா்கள் பெறப்பட்ட நிலையில் அதில் 58 புகாா்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் 25 பெண்கள் உள்பட 239 போ் கலந்து கொண்டனா்.

