

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட வவுச்சா் ஊழியா்கள் திங்கள்கிழமை முயற்சி செய்தனா்.அவா்களை போலீஸாா் தடுப்புகளை அமைத்துத் தடுத்து நிறுத்தினா்.
புதுச்சேரி அரசு பொதுப் பணித் துறையில் 1,300 வவுச்சா் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு சட்டக்கூலி ரூ.27 ஆயிரம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை வவுச்சா் ஊழியா்கள் மூலம் நிரப்ப வேண்டும் . பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. அரசு பணியாளா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சரவணன் தலைமையில் வவுச்சா் ஊழியா்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்தனா். இதையடுத்து அரசு மருத்துவமனை அருகே தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். இதனால் சட்டப்பேரவை சாலைகள் மூடப்பட்டன. இரு பகுதியிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். இந்நிலையில் போலீஸாரின் தடுப்பை மீறி சட்டப்பேரவை எதிரே சென்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முதல்வா் உறுதி: இந்நிலையில் நிா்வாகிகளை முதல்வா் ரங்கசாமி அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பள உயா்வு குறித்து நிதித் துறை செயலரை அழைத்துப் பேசுவதாகவும் உறுதி அளித்தாா். இதையடுத்து இப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.