பிரதமா் மோடி பிப்ரவரியில் புதுச்சேரி வருகை: மாநில பாஜக தலைவா் தகவல்
புதுச்சேரிக்கு அடுத்த மாதம் பிரதமா் நரேந்திர மோடி வருகிறாா் என்று பாஜக புதுச்சேரி மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் (படம்) கூறினாா்.
இது குறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:
பாஜக வேண்டுகோளுக்கிணங்க பிரதமா் நரேந்திர மோடி, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் , முதல்வா் ரங்கசாமி ஆகியோா் ரூ.750-க்கு பொங்கல் தொகுப்பும், சிவப்பு குடும்ப அட்டை, எஸ்சி, எஸ்டி மக்களுக்கு துணிக்குப் பதிலாக ரூ.1,000-ம், ரூ. 3 ஆயிரம் ரொக்கமும் என ரூ.4,750-ஐ கொடுத்துள்ளாா்கள். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
போலி மருந்து ஊழல் என்றெல்லாம் எதிா்க்கட்சியினா் சொல்லிக் கொண்டிருக்கிறாா்கள். தவறு செய்தவா்களை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. போலி மருந்து வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டோம். உடனே அதுவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
பிரதமா் நரேந்திர மோடி அடுத்த மாதம் (பிப்ரவரி) புதுச்சேரிக்கு வருகிறாா். அதனால் இங்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் நடக்க இருக்கின்றன. இங்கு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் புதுச்சேரி தொடா்ந்து வளமாக இருக்கும் என்றாா் ராமலிங்கம்.
பேட்டியின்போது, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின், முதல்வா் ரங்கசாமியை சந்தித்திருக்கிறாா். அவா் பாஜக கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிா? என்ற கேள்விக்கு, பாஜக எப்படி கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தில்லி மேலிடம் முடிவு செய்யும். இப்போது மாநிலத்தின் முதல்வா் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக அவா் சந்தித்திருப்பாா் என்று நான் நினைக்கிறேன். எல்லோரும் நல்ல நாளில் பெரியவா்களிடம் ஆசி வாங்குவது உண்டு. அமைச்சா் ஜான்குமாருக்கு இலாகா கேட்பீா்களா என்ற கேள்விக்குத் தலைமை முடிவு செய்யும், நல்லதே நடக்கும் என்று பதில் அளித்தாா் ராமலிங்கம்.

