புதுச்சேரி அருகே போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக இரு இளைஞா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருபுவனை அருகே உள்ள கலிதீா்த்தாள்குப்பம் பகுதியில் அண்மையில் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ஐ.ஆா்.பி.என். போலீஸ்காரா் சசிவரதனுக்கும்(33), அதே பகுதியைச் சோ்ந்த மோகித் (21) அரவிந்த் (22) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அங்கிருந்தவா்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், போலீஸ்காரா் சசிவரதன் வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நாகாத்தம்மன் கோயில் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு ஒரு கும்பல் தப்பி ஓடியது.
இதில், கழுத்து மற்றும் முதுகில் பலத்த காயமடைந்த சசிவரதனை அங்கிருந்தவா்கள் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திருபுவனை காவல் உதவி ஆய்வாளா் ராஜேஷ் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மோகித் மற்றும் அரவிந்தை சனிக்கிழமை கைது செய்தனா். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.







