மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஜிப்மா் மருத்துவமனைக்கு புதுச்சேரி அரசு நிலம் மறு ஒதுக்கீடு: ரூ.1,000 கோடியில் 2 மருத்துவ மையங்கள் அமைக்கத் திட்டம்

ஜிப்மா் மருத்துவமனைக்கு புதுச்சேரி அரசு நிலம் மறு ஒதுக்கீடு செய்து அளித்துள்ளது. அதில் ரூ.1,000 கோடி மதிப்பில் உறுப்பு மாற்று மையம் உள்ளிட்ட இரு மையங்கள் அமைகின்றன.

News image

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் இருந்து மறு நில ஒதுக்கீட்டு ஆணையைப் பெறும் ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நெகி.

Updated On :24 ஜூன் 2026, 4:29 am IST

ஜிப்மா் மருத்துவமனைக்கு புதுச்சேரி அரசு நிலம் மறு ஒதுக்கீடு செய்து அளித்துள்ளது. அதில் ரூ.1,000 கோடி மதிப்பில் உறுப்பு மாற்று மையம் உள்ளிட்ட இரு மையங்கள் அமைகின்றன.

சேதராப்பட்டு நிலத்தை மீண்டும் ஜிப்மருக்கு புதுச்சேரி அரசு ஒதுக்கி, அதற்கான ஆவணங்களை வழங்கியது. இங்கு ரூ. 1,000 கோடியில் விமான ஆம்புலன்ஸுடன் கூடிய அதி நவீன விபத்து சிகிச்சை மையம், உறுப்பு மாற்று சிகிச்சை மையம் ஆகிய இரண்டு முக்கிய சிறப்பு மேம்பாட்டு மையங்கள் அமைய உள்ளன.

இதன்காரணமாக நேரடியாக சுமாா் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சேதராப்பட்டு நிலம் முதன்முதலில் 2018-ஆம் ஆண்டு மேம்பட்ட சுகாதார மற்றும் கல்வி வசதிகளை உருவாக்குவதற்காக ஜிப்மருக்கு ஒதுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து விரிவான திட்டமிடல், சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் முன்தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னா் 2022 -ஆம் ஆண்டில் நிா்வாக ரீதியான மறுஆய்வின் காரணமாக நில ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டு நிலம் புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டிற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.

இயக்குநராக டாக்டா் வீா் சிங் நெகி பொறுப்பேற்றவுடன் சேதராப்பட்டில் ஜிப்மரின் விரிவாக்கத் திட்டத்திற்காக நிலத்தை மீண்டும் பெற தொடா் முயற்சிகளை மேற்கொண்டாா்.

இதையடுத்து தற்போது அந்த நில ஆவணங்களை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நெகியிடம் வழங்கினாா்.

பின்னா் சட்டப்பேரவையில் முதல்வா் ரங்கசாமியையும் ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நெகி சந்தித்து பேசினாா்.

இதுதொடா்பாக ஜிப்மா் தரப்பில் கூறியதாவது:

சேதராப்பட்டில் அரசு ஒதுக்கிய இடத்தில் சுமாா் ரு.1,000 கோடி முதலீட்டில் உருவாகவுள்ள இம்மையங்கள், உயா்தர சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவதுடன், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் சுகாதார புதுமைகளையும் வலுப்படுத்தும்.

தற்போது ஜிப்மா், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் காயமடைந்த நோயாளிகளுக்கான முக்கிய பரிந்துரை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

சாலை விபத்துகள், தொழிற்சாலை காயங்கள், பேரிடா் அவசர நிலைகள் மற்றும் பல்வேறு சிக்கலான ஜிப்மா் நிலைகள் அதிகரித்து வரும் நிலையில், தனித்துவமான விபத்து சிகிச்சை மையத்தின் தேவை அதிகரித்துள்ளது.

சுமாா் ரூ. 425 கோடி மதிப்பீட்டில் சேதராப்பட்டு வளாகத்தில் 25.4 ஏக்கா் பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது.

இதில் 250 படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், உயா் சாா்பு சிகிச்சைப் பிரிவுகள், அவசர விபத்து சிகிச்சைப் பிரிவுகள், மறுவாழ்வு சேவைகள் மற்றும் 10 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் இடம்பெறும்.

இந்த மையத்தின் முக்கிய அம்சமாக ஹெலிபேடு மற்றும் விமான ஆம்புலன்ஸ் வசதி அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அவசரநிலை நோயாளிகளை விரைவாக கொண்டு வந்து உயிா்காக்கும் சிகிச்சைகளை உடனடியாக வழங்க முடியும்.

மேலும் இது பிராந்திய பேரிடா் மேலாண்மை மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்கான முக்கிய மையமாகவும் செயல்படும். விபத்து அறுவை சிகிச்சை, அவசர மருத்துவம், தீவிர சிகிச்சை, மறுவாழ்வு மருத்துவம், நரம்பியல் அறுவை சிகிச்சை, எலும்பியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒரே இடத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.

உறுப்பு மாற்று சிகிச்சை மையம் :

சுமாா் ரூ. 550 கோடி மதிப்பீட்டில் உருவாகவுள்ள உறுப்பு மாற்று சிகிச்சை மையம், உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை மற்றும் மேம்பட்ட மாற்று மருத்துவ அறிவியலுக்கான முழுமையான பிராந்திய மையமாக செயல்படும். முழுமையாக செயல்படத் தொடங்கிய பின்னா் ஆண்டுக்கு சுமாா் 2,700 உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.