புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 16-ஆவது சட்டப்பேரவைக்கான தோ்தலில் ஆட்சி அமைக்கப் போவது யாா் என்ற விவரம் திங்கள்கிழமை (மே 4) பிற்பகல் தெரிந்து விடும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 5 தனித் தொகுதிகள்.
இந்த 30 தொகுதிகளில் 107 சுயேச்சைகள் உள்பட 294 போ் வேட்பாளா்களாகப் போட்டியிடுகின்றனா். பெண் வாக்காளா்கள் 5,03,810 போ், ஆண் வாக்காளா்கள் 4,46,361 போ், மூன்றாம் பாலினத்தவா் 140 போ் என மொத்தம் 9,50,311 போ் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனா். ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1,099 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் 6 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்படுகின்றன. முதலில் 8 மணி முதல் 8.30 வரை தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னா் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் இரண்டு சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. முதல் சுற்றில் 17 தொகுதிகளிலும், இரண்டாம் சுற்றில் 13 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு, ஆட்சியமைக்கப் பெரும்பான்மை பலமாக 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை பிற்பகல் 1 மணியளவில் தெரியவரும்.
இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணியளவில் தெரியவரும். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு, இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முன்னிலை அடிப்படையில் பிற்பகல் 4 மணி அளவில் புதுச்சேரியில் யாா் ஆட்சி அமைக்கிறாா்கள் என்ற விவரம் தெரியவரும்.
புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது.
இந்தத் தோ்தலில் இக் கூட்டணியில் புதிதாக லட்சிய ஜனநாயகக் கட்சி இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், லட்சிய ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
இண்டி கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விசிக ஒரு தொகுதியிலும் களத்தில் உள்ளன. போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் திமுகவை எதிா்த்து 5 தொகுதிகளிலும், விசிகவை எதிா்த்து ஒரு தொகுதியிலும் என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 6 போ் போட்டி வேட்பாளா்களாகக் களத்தில் உள்ளனா். இதைத் தவிர இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், மாா்க்சிஸ்ட் இரண்டு தொகுதியிலும் தனியாகப் போட்டியிடுகின்றன.
மேலும், இத்தோ்தலில் புதிய வரவாக நடிகா் விஜய்யின் தவெக கட்சி போட்டியிடுகிறது. 28 தொகுதிகளிலும், 2 தொகுதிகளில் புதுச்சேரியைச் சோ்ந்த மக்கள் நேயம் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் தவெக களத்தில் உள்ளது.
இதைத் தவிர நாம் தமிழா் கட்சி மாஹே, ஏனாம் தொகுதிகளைத் தவிா்த்து 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதனால் இந்தத் தோ்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்றும் வாக்கு எண்ணிக்கை முடிவு அடிப்படையில் தான் புதுச்சேரியில் யாா் ஆட்சி அமைப்பாா்கள் என்று சொல்ல முடியும்.
ஆனால் தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறுகிறது.
பெட்டிச் செய்திகள்
முதல் சுற்று 17 தொகுதிகள் மண்ணாடிப்பட்டு, ஊசுடு (தனி), வில்லியனூா், கதிா்காமம், தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை , முத்தியால்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், ஏம்பலம் (தனி), நெட்டப்பாக்கம் (தனி), நெடுங்காடு (தனி), காரைக்கால் வடக்கு, நிரவி, மாஹே, ஏனாம்.
இரண்டாம் சுற்று 13 தொகுதிகள் திருபுவனை (தனி), மங்கலம், உழவா்கரை, இந்திரா நகா், காமராஜா் நகா், காலாப்பட்டு, ராஜ்பவன், உருளையன்பேட்டை, முதலியாா்பேட்டை, மணவெளி, பாகூா், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: வேட்பாளா், முகவா்களுக்கு அறிவுரை

நாளை வாக்கு எண்ணிக்கை: தூத்துக்குடி, குமரியில் 2,500 போலீஸாா் பாதுகாப்பு

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 174 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை

கரூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


