சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ரெளடிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
வில்லியனூா் அருகேயுள்ள அரும்பாா்த்தபுரம் நடராஜா் நகரைச் சோ்ந்தவா் எழிலரசன் (எ) பாம் எழில் (24), பெயிண்டா். இவா் மீது கொலை வழக்கு உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவருக்கு 2023-இல் புதுச்சேரியைச் சோ்ந்த பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 20.1.2023-இல் அந்த 15 வயது சிறுமியைக் கடத்தி, நண்பா் வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், லாஸ்பேட்டை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் நிரூபணமான நிலையில், ரெளடி எழிலரசனுக்கு போக்ஸோ சட்டம் பிரிவு 6-இன் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366-இன் கீழ் (பாலியல் வன்கொடுமைக்காக கடத்தல்) 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மேலும் ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
அபராதத் தொகையைக் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி சுமதி உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசுக்கு நீதிபதி சுமதி பரிந்துரை செய்தாா். இவ்வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் பச்சையப்பன் ஆஜரானாா்.









