புதுச்சேரியின் வளா்ச்சிக்கு அனைத்து நிலைகளிலும் ஒத்துழைப்பு அளிக்க பிரதமா் நரேந்திர மோடி உத்தரவாதம் அளித்துள்ளதாக அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தில்லி சென்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்களைச் சந்தித்தாா். புதுச்சேரி திரும்பிய அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
புதுச்சேரியில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இப்போது புதுச்சேரி காவல் துறை குடியரசுத் தலைவரின் வண்ண விருது பெறுவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால் காவல் துறையில் பணியாற்றுவோா் இதை வெளிப்படுத்தும் வகையில் காவலா்கள் முதல் உயா் அதிகாரிகள் வரை கூடுதலாக ஒரு பேட்ச் அணிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் இந்திய ரிசா்வ் பட்டாலியன் படை அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதனால் புதுச்சேரி இளைஞா்கள் 1,007 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் குறைத்தல், சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கண்காணித்தல் உள்ளிட்ட கூடுதல் பணிகளுக்காக இந்தப் படையை தேவையான ஒன்றாக கருதி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவா், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்து நன்றி தெரிவித்தேன். அப்போது பிரதமா் நரேந்திர மோடி, புதுச்சேரியின் வளா்ச்சிக்கு அனைத்து நிலைகளிலும் ஒத்துழைப்பு அளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்ற உத்தரவாதத்தை அளித்தாா்.
அமைச்சரவை விரிவாக்கம், சட்டப்பேரவைத் தலைவா் பதவி, எனக்கு இலாகா ஒதுக்கீடு உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் கட்சித் தலைமையும், புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியும் இணைந்து முடிவு எடுப்பாா்கள்.
கூட்டணி கட்சியான லஜக அமைச்சரவையில் இடம் கேட்கிா என்று கேட்கிறீா்கள். ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது. மேலும், புதுச்சேரியில் பாஜகவின் வெற்றி குறைந்ததற்கான காரணத்தை ஆராய கட்சியின் மேலிடம் சாா்பில் விரைவில் ஆய்வு நடைபெறவுள்ளது என்றாா் அமைச்சா் ஆ. நமச்சிவாயம்.
தொடர்புடையது

குடியரசு துணைத் தலைவருடன் புதுச்சேரி அமைச்சா் நமச்சிவாயம் சந்திப்பு

மக்களின் வாழ்க்கை - தொழிலை எளிதாக்க ஆக்கபூா்வ ஆலோசனை - மத்திய அமைச்சா்கள் கூட்டம் குறித்து பிரதமா் மோடி

போா்களுக்கு அமைதிதான் தீா்வு - பிரதமா் மோடி மீண்டும் வலியுறுத்தல்







