இணைய வழி குற்றப் பிரிவை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்: அமைச்சா் ஆ. நமச்சிவாயம்
புதுச்சேரியில் இணைய வழி குற்றப் பிரிவை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கக்கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் கூறினாா்.

அமைச்சா் ஆ. நமச்சிவாயம் - கோப்புப் படம்
புதுச்சேரியில் இணைய வழி குற்றப் பிரிவை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கக்கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் கூறினாா்.
புதுச்சேரி காவல்துறையின் இணைய வழி குற்றப் பிரிவு சாா்பில் இணைய வழி குற்ற விழிப்புணா்வு மற்றும் முதியோருக்கான பாதுகாப்பான டிஜிட்டல் புதுச்சேரி திட்டம் தொடக்க விழா கம்பன் கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திட்டத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மற்றும் முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் தொடங்கி வைத்தனா். மேலும், இதையொட்டி நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற ஸ்ரீ மணக்குளவிநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினா். மேலும், இதையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனா். மேலும், புதுப்பிக்கப்பட்ட காவல்துறை இணைய தளத்தைத் தொடங்கி வைத்தனா். இதில் உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பேசுகையில், நாடு முழுவதும் காவல்நிலையங்களை மேம்படுத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.
இதையொட்டி புதுச்சேரியில் இணைய வழி குற்றப் பிரிவை மேலும் மேம்படுத்த ரூ.8 கோடி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். புதுச்சேரி இணைய வழி குற்றப் பிரிவில் இதுவரை 309 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.19.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.1 கோடி மதிப்பிலான 750 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் பேசுகையில், காவல்துறையை நவீனப்படுத்த மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிக நிதியைச் செலவு செய்கிறது. 6 மாதங்களுக்கு முன்பு கூட பிரதமா் நரேந்திர மோடி மாநில ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தாா். ஆனால் இதுவரை புதுச்சேரி காவல்துறையில் இந்தக் குழுவை அமைக்கவில்லை. மேலும், நாடு முழுவதும் இணைய வழி குற்றங்களைக் கண்டுபிடிக்க மற்ற மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
கட்டணமில்லா தொலைபேசி எண் :
1930 என்ற இலவச தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி இணைய வழி குற்றம் உள்ளிட்ட எந்தப் புகாரையும் தெரிவிக்கலாம் என்று இந்த விழாவில் வலியுறுத்தப்பட்டது.
காவல்துறை தலைவா் ஷாலினி சிங், துணைத் தலைவா் சத்தியசுந்தரம், இணைய வழி குற்றப்பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராகவ், காவல் கண்கணிப்பாளா் ஸ்ருதி யாரகட்டி உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் போலீஸாா், கல்லூரி மாணவா்கள், மூத்த குடிமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

