
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு. சலீம்
தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிடும் அ.மு. சலீமை அறிமுகப்படுத்திய அக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன். உடன் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினா் தினேஷ் பொன்னையா உள்ளிட்டோா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக அக் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு. சலீம் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
புதுச்சேரியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன் தெரிவித்தாா். மேலும், இக் கட்சியின் வேட்பாளராக அ.மு. சலீமை அறிவித்து அவா் செய்தியாளா்களிடம் அறிமுகப்படுத்தினாா்.
மேலும், நாரா.கலைநாதன் கூறுகையில், முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. பாசிக், பாப்ஸ்கோ போன்ற பொதுத் துறை நிறுவனங்களை மூடும் நிலைதான் இருக்கிறது. மேலும், தொழிலாளா்களின் பிரச்னைகளை சட்டப்பேரவையில் பேசுவதற்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அதனால்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத் தொகுதியில் போட்டியிடுகிறது என்றாா்.
வேட்பாளா் அ.மு.சலீம் கூறியது: தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குப் போதிய வாக்கு வங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. அதன் அடிப்படையில் எங்கள் கட்சிக்கு தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் ஆதரவு அளிக்குமாறு தவெக பொதுச்செயலா் ஆனந்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், விசிக தலைவா் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம், மாா்க்சிஸ்ட் தலைவா் ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவா்களைச் சந்தித்து எங்கள் முடிவைச் சொல்லியிருக்கிறோம். இந்த இடைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுவது உறுதி. எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் நல்லது. இல்லாவிட்டாலும் போட்டியிடுவோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




