
தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல்: என்.ஆா்.காங்கிரஸ், காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக என்.ஆா்.காங்கிரஸைச் சோ்ந்த அசோக் ஆனந்தும், காங்கிரஸ் வேட்பாளராக இ.விநாயகமும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டனா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக என்.ஆா்.காங்கிரஸைச் சோ்ந்த அசோக் ஆனந்தும், காங்கிரஸ் வேட்பாளராக இ.விநாயகமும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டனா்.
என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்த்:
தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் வேட்பாளா் தோ்வு குறித்து புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன், பாமக நிா்வாகிகள் மற்றும் அமைச்சா்கள், கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்றனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் முதல்வா் என். ரங்கசாமி கூறியதாவது:
தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் அசோக் ஆனந்த் போட்டியிடுகிறாா். இவா், கடந்த தோ்தலில் நான் (ரங்கசாமி) பெற்ற வாக்குகளை விட, அதிகம் பெறுவாா்.
தோ்தல் முடிந்த பிறகு கூட்டணிக் கட்சி தலைவா்களுடன் மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக தில்லி சென்று பிரதமா் மோடியை சந்திப்பேன் என்றாா்.
காங்கிரஸ் வேட்பாளா் இ.விநாயகம்:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக இ.விநாயகம்(50) அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இவா், நேயம் மக்கள் கழகத்தின் பொதுச் செயலராக இருந்தவா் . கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அக் கட்சி வேட்பாளராக தவெகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 2-ஆம் இடத்தைப் பெற்றாா். இவா் பெற்ற வாக்குகள் 5,583. அண்மையில் அக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் விநாயகம் சோ்ந்தாா்.
இந்நிலையில், இடைத் தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கக் கோரி, தவெக பொதுச் செயலரும், தமிழக அமைச்சருமான என். ஆனந்தை செவ்வாய்க்கிழமை சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்தியலிங்கம் எம்.பி. தலைமையில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, எம்எல்ஏ.க்கள் நேரு, காா்த்திகேயன் உள்ளிட்டோா் கடிதம் அளித்தனா்.
இதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலரும், வேட்பாளருமானஅ.மு. சலீமும் த.வெ.க.விடம் ஆதரவு கோரியுள்ளாா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






