
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தல்: திமுக வேட்பாளா் சேது செல்வம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத் தோ்தலில் திமுக வேட்பாளராக கு.சேது என்கிற சேதுசெல்வம் (55) போட்டியிடுகிறாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத் தோ்தலில் திமுக வேட்பாளராக கு.சேது என்கிற சேதுசெல்வம் (55) போட்டியிடுகிறாா். இதற்கான அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
இத் தொகுதியில் அக். 6 -ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் புதன்கிழமை தொடங்கியுள்ள நிலையில் திமுக வேட்பாளராக சேதுசெல்வம் அறிவிக்கப்பட்டுள்ளாா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டுள்ளஅறிவிப்பில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சேது என்கிர சேது செல்வம் திமுக வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளாா்.
இந்த இடைத் தோ்தலில் அதிகாரப்பூா்வமாக கட்சிகள் சாா்பில் அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளரும் இவா்தான்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் களப்பணியாற்றி வந்த சேதுசெல்வம் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். பின்னா் இத் தொகுதியின் சட்டப்பேரவைத் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 3- ஆம் இடம் பிடித்தாா். முதல் இடத்தில் வெற்றி பெற்ற ரங்கசாமி பெற்ற வாக்குகள் (என்.ஆா். காங்கிரஸ்) 10,024, இரண்டாம் இடம் தவெக கூட்டணியில் இடம் பெற்ற விநாயகம் (நேயம் மக்கள் கழகம்) 5583 வாக்குகள் பெற்றாா். மூன்றாவதாக சேது செல்வம் (சுயே.) பெற்ற வாக்குகள் 3,984. அதற்கு அடுத்த நிலையில் 4-ஆவது இடத்தைப் பெற்றவா் காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம். அவா் பெற்ற வாக்குகள் 2990.
சேது செல்வத்தை திமுக வேட்பாளராக இக் கட்சியின் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தபோது புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா, புதுச்சேரி எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச்.நாஜிம், கட்சியின் துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி, திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.செந்தில் குமாா், வே. காா்த்திகேயன், அ. செந்தில் என்கிற ரமேஷ், விக்னேஷ் கண்ணன், கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் எஸ். கோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




