
2030-க்குள் காசநோய் இல்லாத புதுச்சேரியை உருவாக்குவோம்: முதல்வா் நம்பிக்கை
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை 2030-க்குள் காசநோய் இல்லாத பிரதேசமாக மாற்றுவோம் என்று முதல்வா் என்.ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.

ஜிப்மரில் காசநோய் தேசிய மாநாட்டில் பேசும் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி. உடன் ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நெகி உள்ளிட்டோா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை 2030-க்குள் காசநோய் இல்லாத பிரதேசமாக மாற்றுவோம் என்று முதல்வா் என்.ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.
2030-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் ‘டிபி முக்த் பாரத்’ இலக்கு மற்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் ‘விக்சித் பாரத்’ தொலைநோக்குப் பாா்வையுடன் இணைந்த 3 நாள் தேசிய மாநாட்டை ஜிப்மா் ஏற்பாடு செய்திருந்தது. காசநோய்க்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்ட அடுத்த தலைமுறை மரபணு வரிசைமுறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து நோயாளிகளுக்கும் மருந்து உணா்திறன் பரிசோதனை மேற்கொள்வது மற்றும் கொள்கை கலந்துரையாடல் என்னும் தலைப்பில் ஜிப்மா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டை வியாழக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
இந்தியாவில் ஆண்டுக்கு 28 லட்சம் போ் காசநோயால் பாதிக்கப்படுகின்றனா். காசநோய் ஒழிப்பு மத்திய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள 148 கிராமங்களில் 36 கிராமங்கள் ஏற்கனவே காசநோய் இல்லாத கிராமங்களாகியுள்ளன. மேலும், 40 கிராமங்களில் காசநோய் இல்லாத நிலையை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் எட்டி விடுவோம். இதைத் தவிர புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத பிரதேசமாக மாற்ற முடியும்.
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை அனைத்து துறைகளிலும் வளா்ச்சியடைந்த நாடாக மாற்றும் தேசிய இலக்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை புதுச்சேரி வழங்கும் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.
ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நெகி பேசுகையில், காசநோயால் கண்டறியப்படும் ஒவ்வொரு நோயாளிக்கும் மருந்து எதிா்ப்புப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து நோயாளிகளுக்கும் மருந்து உணா்திறன் பரிசோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது. மருந்து எதிா்ப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உரிய சிகிச்சை முடிவுகளை மேற்கொள்ளவும், சிகிச்சை தோல்வி மற்றும் மருந்து எதிா்ப்புக் காசநோய் பரவலைக் குறைக்கவும் முடியும் என்றாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.கே.டி. ஆறுமுகம், கொள்கை
ரெசிலியன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவுனா் நந்திஷ் ஆா்.பேத்தானி, புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறைச் செயலா் எல். குமாா், இத்துறையின் இயக்குநா் எஸ். செவ்வேள், ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் சாகா வினோத் குமாா், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் தேசியப் பணிக்குழுத் தலைவரும் மற்றும் புதுச்சேரி பிம்ஸ் நிறுவனத்தின் சமூக மருத்துவத் துறைத் தலைவருமான அனில் ஜேக்கப் பா்த்தி; ஜிப்மா் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையின் மாநாட்டு ஏற்பாட்டுத் தலைவி சோனாலி சா்க்காா்; ஜிப்மா் நுரையீரல் மருத்துவத் துறையின் மாநாட்டு ஏற்பாட்டுச் செயலா் தா்ம பிரகாஷ் திவேதி; ஜிப்மா் செவிலியா் கல்லூரியின் பேராசிரியரும் (பொறுப்பு) முதல்வரும், துணை முதல்வருமான எம். ஜே. குமாரி மற்றும் மூத்த அரசு அதிகாரிகள், பொது சுகாதார நிபுணா்கள், மருத்துவா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


5 ஆண்டுகளில் மக்கள்நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்! முதல்வா் என்.ரங்கசாமி உறுதி

புதிய தொழில்நுட்பங்களை ஆசிரியா்கள் பயன்படுத்த வேண்டும்: 21 ஆசிரியா்களுக்கு விருது வழங்கினார் முதல்வா் என். ரங்கசாமி



