தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் 1,300 பேரின் சான்றிதழ்கள் போலி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்கள் குறித்த உண்மைத் தன்மை

News image
Updated On :29 அக்டோபர் 2013, 9:45 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்கள் குறித்த உண்மைத் தன்மை கண்டறியும் பணியில் (genuine certificate) பல்கலை. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 1,300 பேரின் சான்றிதழ்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு புகார் காரணமாக, பல்கலை. நிர்வாகியாக ஷிவ்தாஸ் மீனா கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் சட்டத் திருத்த மசோதா மே 16ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு அண்மையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 13,500 ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளனர்.  கூடுதலாகப் பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆசிரியர், ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

ஊழியர்களின் பணி நியமனத்தில் நிர்வாகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அவர்களின் சான்றிதழ்கள் புலங்கள் வாரியாக பெறப்பட்டு அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி உண்மைத் தன்மை கண்டறிந்து சான்றிதழ் (genuine certificate) வழங்குமாறு பல்கலை. நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளது.

மேலும் 8ஆம் வகுப்பு பயின்று, நேரடியாக திறந்த வெளிப்பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று தனி அலுவலர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றுபவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு, அதுகுறித்தும் அரசால் நியமிக்கப்பட்ட பல்கலை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, சிதம்பரத்தில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, சேத்தியாத்தோப்பு பள்ளி ஆகிய பள்ளிகளில் பயின்றதாக வழங்கப்பட்ட சான்றிதழ்கள் 50-க்கும் மேற்பட்டவை போலியானவை எனச் சான்று பெறப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொலைநிலை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்று பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை கண்டறிய விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோரின் சான்றுகள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.

இது குறித்து பல்கலை. ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு துணை ஒருங்கிணைப்பாளரும், ஊழியர் சங்கத் தலைவருமான சி.மதியழகன் தெரிவித்தது:

அண்ணாமலைப் பல்கலை.யில் முறையாக பணியில் சேர்ந்துள்ள எந்த ஒரு ஆசிரியர், ஊழியரையும் வேலையிலிருந்து நீக்குவதையும், ஊதியத்தை குறைப்பதையும் ஏற்க மாட்டோம்.

அப்படி நடைபெற்றால் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்குவோம். அதே நேரத்தில் தவறு செய்துள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு துணை போகாது, தலையிடாது என சி.மதியழகன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.