
மாணவிகள் உயிரிழந்த வழக்கு: 4 பேரின் காவல் நீட்டிப்பு
சின்னசேலம் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் உயிரிழந்த வழக்கில், கல்லூரித் தாளாளர் உள்ளிட்ட 4 பேரின் நீதிமன்றக் காவலை வருகிற 17-ஆம் தேதி வரை நீட்டித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சின்னசேலம் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் உயிரிழந்த வழக்கில், கல்லூரித் தாளாளர் உள்ளிட்ட 4 பேரின் நீதிமன்றக் காவலை வருகிற 17-ஆம் தேதி வரை நீட்டித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய 3 பேர் கடந்த ஜன.23ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, அந்தக் கல்லூரியின் தாளாளர் வாசுகி, அவரது மகன் சுவாகர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி, ஊழியர் வெங்கடேசன் ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இவர்களது நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததையடுத்து, வாசுகி உள்ளிட்ட 4 பேரும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி சுபா அன்புமணி முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு மார்ச் 17 வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், 4 பேரும் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜராக வந்த வாசுகி கூறியது:
மாணவிகள் இறந்த சம்பவம் கொலை என்றனர், தற்கொலை என்றனர். மாணவிகள் எழுதிய கடிதம் பொய்யானது எனத் தெரிய வந்துள்ளதால், நாங்கள் குற்றவாளியில்லை. உண்மையான குற்றவாளியை எப்போது கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்றார் அவர்.
செல்லிடப்பேசி பறிமுதல்: இந்த வழக்கில் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மாணவிகள் இறந்து கிடந்த இடத்திலிருந்து ஒரு செல்லிடப்பேசியை போலீஸார் கண்டெடுத்தனர்.
இந்த நிலையில், மற்ற இரு மாணவிகளின் செல்லிடப்பேசிகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் வைத்திருந்தனர். அவற்றையும் போலீஸார் அண்மையில் மீட்டனர். மேலும், அந்த செல்லிடப்பேசிகளின் சிம் கார்டுகள் கிணற்றில் வீசப்பட்டதையும் போலீஸார் தேடி எடுத்துள்ளனர். இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தாளாளருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு
மூன்று மாணவிகள் இறந்த வழக்கில் எஸ்.வி.எஸ். கல்லூரித் தாளாளர் வாசுகிக்கு ஜாமீன் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகிய மூவரும் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக கல்லூரித் தாளாளர் வாசுகி, அவரது மகன் சுவாகர் வர்மா, உதவியாளர் வெங்கடேசன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிப்ரவரி
10-இல் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஆர்.சி.பால்கனராஜும், அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முகவேலாயுதமும் ஆஜராகினர்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வாசுகியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மற்ற இருவரும் ரூ.10 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் உத்தரவாதத்துடன் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் முன் தினமும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






