விழுப்புரம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம் ; 93 பேர் கைது
விழுப்புரம் அருகே ரயில்வே கடவுப்பாதை பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில்


விழுப்புரம் அருகே ரயில்வே கடவுப்பாதை பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 93 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் இருந்து சாலாமேடு வழியாக காவணிப்பாக்கம் செல்லும் சாலை, விழுப்புரம்-விருத்தாசலம் ரயில் பாதையைக் கடந்து செல்கிறது. இந்த சாலை வழியாக சாலாமேடு, வேட்டப்பூர், சாமிப்பேட்டை, ரெட்டிப்பாளையம், தென்குச்சிப்பாளையம், திருப்பாச்சனூர், குச்சிப்பாளையம், ரெட்டிப்பாளையம் உள்பட 15 கிராம மக்கள் சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் சாலாமேடு ரயில்வே கடவுப்பாதையில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பெரிய அளவிலான சிமென்ட் கட்டுமானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலாமேடு, வேட்டப்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக, கையில் பதாகைகளை ஏந்தி திரண்டு கடவுப்பாதை நோக்கி வந்தனர். அவர்கள் கடவுப்பாதையைக் கடந்து சாலையில் அமர்ந்து, ரயில்வே சுரங்கப்பாதை வேண்டாம், மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவல் அறிந்த தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன், வட்டாட்சியர் சுந்தரராஜன் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது: விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட இடங்களில் மழை நீர் புகுந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.
தற்போது இந்த கடவுப்பாதையின் இரு புறங்களிலும் ஏரி கால்வாய்கள் செல்கின்றன. மேலும், இது தாழ்வான பகுதி. இங்கு சுரங்கப்பாதை அமைத்தால் மழை நீர் பெருமளவில் தேங்கும். அவசர ஊர்தி தொடங்கி எந்த வாகனமும் செல்லமுடியாது. மேலும், விவசாய விளை பொருள்களை கொண்டு செல்ல முடியாது. ஆகவே, இங்கு சுரங்கப்பாதை அமைக்கக் கூடாது. உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். இது தொடர்பாக பல முறை மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துள்ளதால், எங்கள் கோரிக்கையை கேட்க, மாவட்ட ஆட்சியர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் இங்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.
93 பேர் கைது: அதற்கு, தற்போது மாவட்ட ஆட்சியர் வேறு பணியில் இருப்பதால் இங்கு வர இயலாது. இதுகுறித்து ஆட்சியருக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்படும். ஆகவே, போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினர்.
இருப்பினும், தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீஸார் அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்ற முயன்றனர்.
ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், போலீஸ் வாகனத்தின் முன் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெண்கள் உள்பட 93 பேரை போலீஸார் கைது செய்து, 3 வாகனங்களில் ஏற்றிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து, டி.எஸ்.பி. சங்கர் நிகழ்விடத்துக்கு வந்து, எஞ்சியிருந்த போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேசி, அவர்களை அனுப்பி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...