விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 30 மதுக் கடைகள் மூடல்

உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் சாலையோரம் உள்ள 30 மதுக்கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை மூடியது.
Updated on
1 min read

உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் சாலையோரம் உள்ள 30 மதுக்கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை மூடியது.
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமிழகத்தில் சுமார் 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் 234 டாஸ்மாக் மதுக் கடைகளில், 84 மதுக் கடைகள் மூடப்பட்டன.  பின்னர், மூடப்பட்ட அந்த மதுக்கடைகளை நீதிமன்ற உத்தரவை மீறாத வகையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து தொலைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து நீதி மன்ற உத்தரவை மீறாத வகையில் தமிழகத்தில் சுமார் 1,700 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மொத்தம் 174 டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்பட்டு வந்தன. 
இதனை எதிர்த்து, பாமகவைச் சேர்ந்த வழக்குரைஞர் கே. பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில்,  தேசிய நெடுஞ்சாலைகளை தரம் மாற்றாமலேயே மதுக்கடைகள் திறக்கப்பட்டதாகவும், அவ்வாறு திறக்கப்பட்ட கடைகளை மீண்டும் மூட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நெடுஞ்சாலைகளை தரம் மாற்றாமல் கடைகளை திறந்தது தவறு. எனவே, திறந்த கடைகளை மூடவேண்டும். புதிய கடைகளை திறக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
   இந்த உத்தரவைத் தொடர்ந்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சிப் பகுதிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 30 டாஸ்மாக் மதுக்கடைகள் சனிக்கிழமை இரவுடன் மூடப்பட்டன.
விழுப்புரத்தில் இந்திரா நகர் அருகே மாம்பழப்பட்டு சாலையில் இருந்த மதுக் கடை, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரில் இருந்து மதுக்கடை, சென்னை சாலையில் பெட்ரோல் நிரப்பும் நிலையம் அருகில் இருந்த மதுக்கடை, சென்னை சாலையில் அரசு கிடங்கு எதிரே இருந்த மதுக் கடை ஆகியவை மூடப்பட்டுள்ளன.
  இதேபோல, திண்டிவனத்தில் 6 கடைகளும், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சியில் தலா 4 கடைகளும், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சின்னசேலத்தில் தலா 2 கடைகளும், சங்கராபுரம், தியாகதுருகத்தில் தலா ஒரு கடையும் மூடப்பட்டன.
பணியாளர்கள் பாதிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 30 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையடுத்து, அந்த மதுக் கடைகளில் பணியாற்றி வந்தவர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com