ரத்த தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரிக்கு 2 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் வந்த இவர்களுக்கு, இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தா அருகே உள்ள சாப்தானி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயதீப் ராவுத் (49), டால்கோலா பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சிபலால் பெஸ்ரா (23). இவர்கள் இருவரும் ரத்த தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொல்கத்தாவிலிருந்து ஓடிஸா, ஆந்திரம் வழியாக கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் ஜதாப்பூர் இளைஞர் சாகச நலச் சங்கம் சார்பில், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஒத்துழைப்புடன் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தங்களது 45 நாள் பயணத்தை தொடங்கினர். நாள் ஒன்றுக்கு 60 கி.மீ. தொலைவு வீதம் சைக்கிளில் பயணம் செய்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் விழுப்புரத்துக்கு வந்தனர். அவர்களை விழுப்புரம் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் பாலதண்டாயுதம், செயலர் சகாதேவன் உள்ளிட்டோர் வரவேற்றனர் (படம்).
பயண அனுபவம் குறித்து ஜெயதீப் ராவுத் கூறியதாவது: ஒருமுறை நான் கால்பந்து விளையாடியபோது கீழே விழுந்தேன். அப்போது வயிற்றில் கட்டை குத்தியதால் பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கு சிகிச்சை அளிக்க 10 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. உடனே எனது நண்பர்கள், உறவினர்கள் ரத்த தானம் வழங்கி என்னை காப்பாற்றினர். இதனால் ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல்வேறு முகாம்களை நடத்தி வந்தேன். இந்த நிலையில், நாடு முழுவதும் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சுமார் 2,500 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளேன். என்னுடன் பயணத்தில் சிபலால் பெஸ்ராவும் பங்கேற்றுள்ளார். தற்போது வரை 2,050 கி.மீ. தொலைவை கடந்துள்ளோம்.
அடுத்த சில நாள்களில் கன்னியாகுமரியை சென்றடைவோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








