அலுவலகங்கள், அமைப்புகள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் 72ஆவது சுதந்திர தின விழா புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
Published on
Updated on
2 min read

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் 72ஆவது சுதந்திர தின விழா புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், உதவி இயக்குநர் ராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். உதவி இயக்குநர் மோகன், ஆய்வாளர் ஞானவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 விழுப்புரத்தில் புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கூட்டமைப்புத் தலைவர் ஜி.பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.அண்ணாமலை வரவேற்றார். தொண்டு நிறுவன இயக்குநர் மு.மணிவண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
 அன்னை உதவும் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. அரசு சட்டவிதிகள் படி உள்ளாட்சி பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். துணைத் தலைவர் டி.வெங்கடேசன், மூர்த்தி, பழனியம்மாள், ஜெகன், தங்கராசு, மோகன்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.
 செஞ்சி: செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன் முன்னிலையில் எம்எல்ஏ செஞ்சி மஸ்தான் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இளநிலை உதவியாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எஸ்.ரங்கநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் துரைசெல்வம், மண்டல துணை வட்டாட்சியர் செல்வமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 செஞ்சி நகர காங்கிரஸ் சார்பில் செஞ்சி கூட்டுச் சாலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வட்டாரத் தலைவர் ஏ.ஜி.சரவணன்தலைமை வகித்தார். நகரத் தலைவர் சி.சரவணன் முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.பூபதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
 தமிழ்ச்சங்கத்தில்...: அவலூர்பேட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சங்கத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். துணைச் செயலர் சிவனேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். காந்தி சிலைக்கு சிதம்பரநாதன் மாலை அணிவித்தார்.
 அகலூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் ஏரி நீர்ப் பாசனத் தலைவர் எஸ்.அப்பாண்டைராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
 திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார்-ஆட்சியர் சாருஸ்ரீ தேசிய கொடியேற்றி வைத்தார். வட்டாட்சியர் ப.செல்வராஜ், சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 திருக்கோவிலூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ் தேசியக் கொடியேற்றி வைத்தார்.
 திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்டத் தலைவர் சிங்கார.உதியன் தேசியக் கொடியேற்றி வைத்தார். நூலகர் மு.அன்பழகன், பணியாளர் சு.சம்பத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 திண்டிவனம்: திண்டிவனத்தில் நகர காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நகரத் தலைவர் விநாயகம் தலைமையில் பழைய நகராட்சி அலுவலக கட்டடம் அருகே உள்ள காந்தி சிலை, நேரு வீதியில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
 முன்னாள் மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொருளர் கருணாகரன், வட்டாரத் தலைவர் காணை சுரேஷ், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொன்.ராஜா, மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் வெங்கட் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.