பைக் மீது லாரி மோதல்: தாய், குழந்தை சாவு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய், 2 வயது குழந்தை உயிரிழந்தனர். 
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய், 2 வயது குழந்தை உயிரிழந்தனர்.
 விழுப்புரம் அருகேயுள்ள விராட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (31). இவரது மனைவி சாவித்ரி (27). மகள் மதுஷா (2).
 திண்டிவனம் அருகேயுள்ள மயிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தனது மனைவி, குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் ராஜீவ் காந்தி சென்றார்.
 பின்னர், மூவரும் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திருப்பிக் கொண்டிருந்தனர்.
 விக்கிரவாண்டி சாலையில் வந்த போது, சென்னையிலிருந்து திருச்சிக்கு மதுப் புட்டிகளை ஏற்றிச் சென்ற லாரி, சாலையைக் கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருப்பதற்காக இடதுபுறம் திரும்பியதில், ராஜீவ் காந்தி, முன்னாள் ராணுவ வீரர் அகஸ்டின் ஆகியோரின் இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.
 இதில் சாலையில் விழுந்த சாவித்ரி, 2 வயது குழந்தை மதுஷா ஆகியோர் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் அவர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 பலத்த காயமடைந்த ராஜீவ் காந்தி, அகஸ்டின் ஆகியோர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
 விபத்து குறித்து அறிந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், டிஎஸ்பி சங்கர், தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் உள்ளிட்டோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 விக்கிரவாண்டி பகுதியில் நான்கு வழிச் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படாததால், அடிக்கடி நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
 முதல்கட்டமாக சாலைத் தடுப்புகள் அமைக்கப்படும் என காவல் துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
 விபத்து தொடர்பாக, விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர். லாரி ஓட்டுநரான கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள மேல் பூவணிக்குப்பத்தைச் சேர்ந்த காதர் உசேனை (27) போலீஸார் கைது செய்தனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com