நடமாடும் கொள்முதல் நிலையங்கள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையம், நடமாடும் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்று பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையம், நடமாடும் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்று பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
விழுப்புரம் மாவட்டம் மாநிலத்தின் மொத்த உணவு உற்பத்தியில் 10 சதவிகிதத்துக்கு மேல் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த மாவட்டத்தில் நைனார்பாளையம், பனமலைபேட்டை, காணை, தீவனூர், சித்தலிங்கமடம், கண்டாச்சிபுரம், தேவபாண்டலம் ஆகிய பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் சன்ன ரக நெல்லுக்கு ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.1,660, மோட்டா ரக நெல்லுக்கு ரூ.1600 விலை நிர்ணயம் செய்து கொடுக்கப்படுகிறது. விவசாயிகளின் இருப்பிடத்துக்கே சென்று நெல் கொள்முதல் செய்திட நடமாடும் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதிலும், அரசின் ஆதரவு விலை வழங்கப்படும். இது மட்டுமல்லாது 19 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், விளை
பொருள்களை விற்பனைக்கு வழங்கலாம். 
இருப்பு வைத்து விற்கலாம்: நிகழ் ஆண்டு அதிகளவு விளைபொருள்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனால், பொருள்களின் விலை குறைகிறது. விவசாயிகள் தங்களுக்கு ஏற்ற விலை கிடைத்திட விளைபொருள்களின் விலை வீழ்ச்சியான நேரங்களில் பொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூட கிடங்குகளில் இருப்பு வைத்து அதன் மதிப்பில் 75 சதவீதம் வரை பொருளீட்டு முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம். 
விவசாயிகள் விளைபொருள்களை குடோன்களில் 15 நாள்கள் வரை இலவசமாக இருப்பு வைத்து விற்பனை செய்து கொள்ளலாம். விவசாயிகளுக்கு பொருளீட்டு முன்பணமாக அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படும். விளைபொருள்களை அதிகபட்சமாக 180 நாள்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். விலை உயர்வான நேரங்களில் அதனை விற்பனை செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் தினசரி விலை நிலவரத்தை www.agmarknet.nic.in இணையதளத்திலும், 04149-222231 தொலைபேசி மூலமும் தெரிந்து கொண்டு விளைபொருள்களை 
விற்பனைக்கு கொண்டு வரலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com