கள்ளக்குறிச்சியில், சாலையில் ஆசிரியை தவறவிட்ட பணப்பையை எடுத்து அவரிடம் ஆட்டோ ஓட்டுநர் ஒப்படைத்தார். அவரது நேர்மையை காவல் துறையினர் பாராட்டினர்.
கள்ளக்குறிச்சி அண்ணாநகர் அசோகர் சாலையில் வசிப்பவர் செல்வராஜின் மனைவி குமாரி. சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.
இவர், திங்கள்கிழமை காலை கள்ளக்குறிச்சியில், சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.10 ஆயிரத்தை எடுத்து, அதனை ஒரு நைலான் வயர் பையில் மொபெட்டில் தொங்கவிட்டபடி, வீட்டுக்குப் புறப்பட்டார். வீட்டில் மொபெட்டை நிறுத்திவிட்டு பார்த்தபோது, பணம் வைத்திருந்த பையைக் காணவில்லை. உடனே, அவர் இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதனிடையே, அந்த வழியாக ஆட்டோ ஓட்டிச் சென்ற கள்ளக்குறிச்சி, அண்ணாநகர் கட்டபொம்மன் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், கீழே கிடந்த அந்த பணப்பையை எடுத்துள்ளார். அதனை திறந்து பார்த்தபோது, அதில் பணத்துடன் ஆசிரியையின் அடையாள அட்டையும் இருந்தது.
இதையடுத்து, அந்த அட்டையில் குறிப்பிட்டிருந்த முகவரியைக் கண்டு, காவல் துறை மூலம் ஆசிரியை குமாரியிடம் பணப்பையை சிவக்குமார் ஒப்படைத்தார். அவருக்கு ஆசிரியை குமாரி நன்றி தெரிவித்தார். சிவக்குமாரின் நேர்மையை காவல் உதவி ஆய்வாளர் பாலமுரளி வெகுவாகப்
பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.