ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மணல் கடத்தலுக்கு துணைபோகும் போலீஸார்!

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மணல் கடத்தலுக்கு போலீஸாரில் சிலர் துணைபோவதாலேயே, அத்தகைய சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

News image
Updated On :6 செப்டம்பர் 2018, 3:01 am

கே.சுரேஷ்குமார்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மணல் கடத்தலுக்கு போலீஸாரில் சிலர் துணைபோவதாலேயே, அத்தகைய சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை, கெடிலம், சங்கராபரணி உள்ளிட்ட ஆறுகள், இதன் கிளை ஆறுகளிலிருந்து பெருமளவு மணல் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்பட்டு வருகிறது. ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், பல மடங்கு
 வருவாய் கிடைப்பதால், கடத்தலில் ஈடுபடுவோர் இதனை முக்கியத் தொழிலாக பல்வேறு கெடுபிடிகளுக்கும் இடையே துணிகரமாகச் செய்து வருகின்றனர்.
 விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை தென்பெண்ணை ஆறு நுழையும் பகுதியில் உள்ள மணலூர்பேட்டை தொடங்கி, திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், காணை, திருவெண்ணெய் நல்லூர், விழுப்புரம், வளவனூர், கண்டமங்கலம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில்தான் மணல் கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது.
 லாரிகள், டிராக்டர்களை ஆற்றுக்குள் நேரடியாகக் கொண்டு சென்று மணலை திருடி ஏற்றுவது ஒரு வகை என்றால், மாட்டு வண்டிகள் மூலமாக ஆற்றிலிருந்து திருடப்படும் மணலை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொட்டி வைத்து, லாரிகள் மூலம் கடத்துவது மற்றொரு வகை. இவ்விரு வகைகளிலும் மணல் அமோகமாக கொள்ளை போகிறது.
 விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 4 பொக்லைன் இயந்திரங்கள், திருட்டு மணலை கடத்திச் சென்ற 21 டிப்பர் லாரிகள், 9 பெரிய லாரிகள், 24 விவசாய டிராக்டர்கள், 86 மாட்டு வண்டிகள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மொத்தம் 159 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிகழாண்டில் ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை 1,176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 8 மாதங்களில் ஆறுகளில் மணல் திருட்டு, கடத்தல் தொடர்பாக 37 பொக்லைன் இயந்திரங்கள், 197 டிப்பர் லாரிகள், பெரிய 113 லாரிகள், 166 டிராக்டர்கள், 642 மாட்டு வண்டிகள் உள்ளிட்ட 1,250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமானோர் கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டனர். எனினும், மணல் திருட்டு, கடத்தல் குறைந்தபாடில்லை. மது கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாய்வதுபோல, மணல் கடத்தல்காரர்கள் மீதும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை எச்சரித்தது. ஆனால், குண்டர் சட்டத்தின்கீழ் இதுவரை இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.
 இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை தொடக்கத்தில் வேகத்துடன் செயல்பட்டு, பின்னர் தொய்வைக் கண்டது. அந்த தனிப்படையில் இருந்த போலீஸாரையே, கடத்தல் கும்பல் தங்களுக்கு சாதகமாக வளைத்துப் போட்டுக் கொண்டது. இதனால், அந்த தனிப்படையும் கலைக்கப்பட்டது.
 மாவட்ட காவல் துறை தீவிர முயற்சி எடுத்தும் மணல் கடத்தலை கட்டுப்படுத்த முடியாததற்கு, காவல் துறையில் உள்ள சிலரே மணல் கடத்துபவர்களுடன் கைகோத்து செயல்படுவதே முக்கிய காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மணல் கடத்தல் சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக இருப்பது, மணல் கடத்தல் தடுப்பு தொடர்பாக காவல் துறையினர் எடுக்கவிருக்கும் நடவடிக்கை குறித்து முன்னரே தகவல் அளிப்பது என போலீஸாரில் ஒரு தரப்பினர் கடத்தல் கும்பலுக்கு "விசுவாசமாக' உள்ளனர்.
 கடந்த வாரத்தில் மட்டும் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த புகாரில் கஞ்சனூர் உதவி காவல் ஆய்வாளர் ஒருவரும், வடபொன்பரப்பி சிறப்பு காவல் ஆய்வாளர் ஒருவரும் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
 இதுபோல 50-க்கும் மேற்பட்ட போலீஸார் புகார்களில் சிக்கி, ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனார். ஆனால், அவர்கள் அடுத்த சில வாரங்களிலேயே தங்களுக்கு வேண்டிய பணியிடத்தை எந்த வழியிலாவது பெற்று, மீண்டும் தங்களது அதே நடவடிக்கையைத் தொடர்கின்றனர்.
 ஆகவே, மணல் கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பதுடன், கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் போலீஸார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 எஸ்.பி. எச்சரிக்கை
 விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 231 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8 மாதங்களில் 1,176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை தொடரும்.
 அதேவேளையில், மணல் கடத்தலுக்கு போலீஸார் துணை போனால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்முறை தவறெனில், ஆயுதப் படைக்கு பணியிடமாற்றப்பட்டு, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதனையே இரண்டாவது முறையும் செய்தால், சம்பந்தப்பட்ட போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.