விழுப்புரம் மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கடந்த 2003-ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கினர். விழுப்புரம் மாவட்டத்திலும் அந்தக் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
12 வட்டங்களில் ஆர்ப்பாட்டம்: இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் திரண்ட ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், கோரிக்கைகளை வலியுறுத்தியும், போராட்டத்துக்கு செவி சாய்க்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பேசினர்.
இதில் தொடக்க நிலை, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கம், அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர், வணிகவரித் துறை, சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் 12 வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் கே.மகாலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் அ.ரஹீம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலையின் பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஜெ.சர்ச்சில் கார்ல் மார்க்ஸ், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் இரா.பழனிவேல் வரவேற்றார்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் பொன்.செல்வராஜ் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையின் மாவட்டத் தலைவர் த.கொளஞ்சிவேலு, வருவாய்த் துறை மாவட்ட பொருளாளர் எல்.ஆனந்த கிருஷ்ணன், ஆய்வக நுட்புணர் சங்க மாநில துணைத் தலைவர் ஜி.அன்பழகன், மருந்தாளுநர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ்.மலர்க்கொடி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதே போல, சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் சீனுவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற காலவரையற்ற போராட்டத்துக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில துணைத் தலைவர்
தம்பு.இராமதாஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் இந்திரா, வட்டாரச் செயலாளர் சு.அண்ணாமலை, மாநில துணைச் செயலாளர் லாரன்ஸ், ஜாக்டோ - ஜியோ வட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பொ.முத்தையன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டச் செயலர் அ.சூரியகுமார் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி: செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு வட்டத் தலைவர் ஜெ.ஜெய்சங்கர், ஊரக வளர்ச்சித் துறை மாவட்டப் பொருளர் கே.சரவணன், கல்வி மாவட்டச் செயலர் அ.பாலசந்தர், எச்.ஞானமணி, ஆசிரியர் முன்னேற்றச்சங்க சீனு.சங்கரநாராயணன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
எஸ்.அறிவழகன், கிளியோபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சங்கம், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கமிட்டனர்.
திருக்கோவிலூர்: ஜாக்டோ - ஜியோ சார்பில் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார்.
முதுகலை ஆசிரியர்கள் சங்க கல்வி மாவட்ட செயலர் ந.காமராஜ், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் மு.வில்வபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
வட்டாரச் செயலர் எஸ்.செந்தில்குமார், முதுகலை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஜனசக்தி, பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த பால் ஆரோக்கியராஜ் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கல்விப் பணி பாதிப்பு: அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பெரும்பாலானோர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், பல பள்ளி
களில் ஆசிரியர்களின்றி, தலைமை ஆசிரியர்கள் ஓரிரு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன.
மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் பலர் பணிக்கு வந்திருந்ததால் வகுப்புகள் நடைபெற்றன. எனினும் முக்கிய பாடப் பிரிவுகளுக்கான ஆசிரியர்களின்றி மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கல்வி அதிகாரிகள் ஆய்வு: முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரத்தில் அரசு மகளிர் பள்ளி, காமராஜர் நகராட்சிப் பள்ளி, வழுதரெட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்த முதன்மைக் கல்வி அலுவலர், அப்போது, பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் வருகைப் பதிவில் ஆப்சென்ட் என குறித்துவிட்டுச் சென்றார்.
தேர்வு தொடங்கியது: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வழக்கம் போல, மதியம் 2 மணிக்குத் தொடங்கிய இத்தேர்வுகள் பள்ளிக்கு வந்திருந்த ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அறநிலையத் துறை, வட்டார போக்குவரத்துத் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அலுவலகங்களில், 60 சதவீதம் பேர் வரை பணிக்கு வந்திருந்தனர். போராட்டத்துக்கு ஆதரவளிக்காத சங்கத்தினர், புதிதாக பணியில் சேர்ந்தவர்கள், ஓய்வு பெறுவோர் உள்ளிட்டோர் பணிக்கு வந்திருந்தனர். எனினும், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், வட்ட அளவில் உள்ள பிற துறை அலுவலகங்களில் பலர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றிருந்தனர்.
21 சதவீதம் பேர் வேலைநிறுத்தம்: விழுப்புரம் மாவட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 36,843 பேர் பணியில் உள்ளனர். இதில், 7,731 பேர், வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். 2,131 பேர் பிற சொந்த காரணங்களுக்காக விடுப்பு எடுத்துச் சென்றிருந்தனர். இந்த வகையில், 21 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டுள்ளதால், நிர்வாகப் பணிகளில் பாதிப்பு ஏதும் இல்லை என்று, மாவட்ட ஆட்சியரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








