வாகன பதிவு எண் பலகையில் தொடரும் விதி மீறல்!

விழுப்புரம் மாவட்டத்தில் வாகனங்களின் பதிவு எண் பலகைகளில் (நம்பர் பிளேட்) விதி மீறி வாசகங்கள், புகைப்படங்கள் இடம்பெறுவது தொடர்கிறது.
Updated on
2 min read


விழுப்புரம் மாவட்டத்தில் வாகனங்களின் பதிவு எண் பலகைகளில் (நம்பர் பிளேட்) விதி மீறி வாசகங்கள், புகைப்படங்கள் இடம்பெறுவது தொடர்கிறது. இதுபோன்ற விதி மீறலைத் தடுக்க வட்டாரப் போக்குவரத்துத் துறை, காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 
சொந்த பயன்பாட்டு வாகனம், வாடகை வாகனம், சரக்கு வாகனம் என ஒவ்வொரு வகை வாகனத்துக்கும் விதிமுறைகளின்படி, பதிவு எண்கள் முன்புற, பின்புற பலகைகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, அதில், எழுத்துகளுக்கு கொடுக்கும் வண்ணம், எழுத்துக்கு பின்புறம் இருக்க வேண்டிய வண்ணம், எழுத்துகளின் அளவு போன்றவை குறித்து விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
  இதன்படி, இரு சக்கர வாகனத்தில் வெள்ளை நிற பின்புறத்தில் கருப்பு நிறத்தால் எண்கள் இடம் பெற வேண்டும். வாகனத்தின் பின்பக்க பதிவு எண் பலகையில் எண்கள் உயரம் 40 மி.மீ.  அளவிலும், எழுத்துகள் 35 மி.மீ. அளவிலும் இருக்க வேண்டும். அவற்றின் தடிமன் 7 மி.மீ. அளவிலும், இரு எண்கள் மற்றும் எழுத்துகளுக்கு இடையேயான இடைவெளி 5 மி.மீ. அளவிலும் இருக்க வேண்டும். இதேபோல, முன் பக்கம் பதிவு எண் பலகைகளுக்கும் அளவு, வரையறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டங்கள் 50 மற்றும் 51 ஆகியவற்றின்படி, இந்த விதிமுறைகளைப் பின்பற்றிய இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் பதிவு எண்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
தற்போது, இந்த விதிமுறைகளை பெரும்பாலான வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றுவதில்லை. தங்கள் விருப்பம்போல, எழுத்துகளின் அளவை மாற்றி எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிறியதாகவும், வளைந்து நெளிந்தும், வண்ணங்களை மாற்றியும் பதிவு எண் பலகையில் எழுதுகின்றனர். சில வாகனங்களில் பதிவு எண் இருக்க வேண்டிய இடத்தில் படங்கள், வசனங்கள், பணியாற்றும் துறையின் பெயர்கள் இடம் பெறுகின்றன. இதுபோன்று, வாகனங்களின் பதிவு எண் பலகையில் புகைப்படங்கள், வாசகங்கள், துறை சார்ந்த பெயர்கள் எழுதுவதும், பதிவு எண்ணில் ஒரு சில எண்களை மட்டும் பெரிதாக எழுதுவது, ஒரு சில எண்களை எழுதாமல் தவிர்ப்பது, அளவை, வடிவத்தை மாற்றி எழுவதுவது போன்றவை குற்றமாகும்.
ஏனெனில் இதுபோன்ற வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தினால், அந்த வாகனத்தின் பதிவெண்ணை குறிப்பிட்டு, உரிமையாளரை அடையாளம் காண முடியும். இதேபோல, குற்றங்களைச் செய்துவிட்டு வாகனத்தில் தப்பிச் செல்வோரை காவல் துறையினர் அடையாளம் காணவும், இந்த பதிவு எண் பெரிதும் உதவுகிறது. மனித மூளைகளில் 4 இலக்க எண்கள் வரை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதால், வாகனப் பதிவு எண்கள் 4 இலக்கமாக இருக்கும்படியாக வழங்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கும் நிலையில், அந்த எண்களை மறைக்க முற்படுவதும், மாற்ற முற்படுவதும், வாசகங்கள், புகைப்படங்கள் மூலமாக கவனத்தை திசை திருப்ப முற்படுவதும் விதிமீறல்களாகும். குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் பயணிக்கும் பல வாகனங்களின் பதிவு எண் பலகையில் இதுபோன்ற விதி மீறல் தொடர்கிறது.
ரூ.100 அபராதம்: இதுகுறித்து கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: வாகன பதிவு எண் பலகைகளில் விதி மீறல் இருந்தால், அதற்கு மோட்டார் வாகனச் சட்டம் 177-இன் படி ரூ.100 அபராதம் விதிக்க முடியும். பதிவு எண்கள் இல்லாமல் இருந்தாலும், பதிவு எண்களில் எழுத்துகளில் வேறுபாடு இருந்தாலும், பதிவு எண் பலகையில் வேறு வார்த்தைகள், புகைப்படங்கள் இருந்தாலும் இந்த அளவிலேயே அபராதம் விதிக்க முடியும். இதற்காக, தனியாக அபராதம் விதிக்க சட்டம் இதுவரையில் இல்லை. ஆகையால், பிற விதி மீறல்கள் பிரிவில் தற்போது வரை ரூ.100 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர். 
குறைவாக அபராதம் விதிப்பதால்தான் வாகன ஓட்டிகள் விதி மீறல்கள் குறித்து லட்சியம் செய்வதில்லை. இது பல குற்றங்களில் இருந்து சமூக விரோதிகள் தப்பிச் செல்லவும், விபத்துகளை ஏற்படுத்தி தப்பிக்கவும் உதவியாக இருக்கிறது.எனவே, வாகன பதிவு எண் பலகை விதி மீறல்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கவும், அபராதத் தொகையை உயர்த்தி, அறிவிக்கவும் காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com