விழுப்புரம் அரசு மாதிரிப் பள்ளியில் தயாராகும் திறன்மிகு வகுப்பறைகள்!
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் நிகழாண்டு முதல் தொடங்கப்படவுள்ள ஆங்கில வழிக் கல்விக்காக திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறைகள் தயாராகி வருகின்றன.


விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் நிகழாண்டு முதல் தொடங்கப்படவுள்ள ஆங்கில வழிக் கல்விக்காக திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறைகள் தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆங்கில வழிக் கல்வி தொடங்குவதற்கு கடந்தாண்டு கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது. அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளியை ஏற்படுத்தி, அதில் 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் வகுப்புகளைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அரசு மாதிரிப் பள்ளிகளாக ஏற்படுத்தப்படும் பள்ளிகளில் எல்கேஜி முதல் தொடர்ச்சியாக பிளஸ் 2 வரை வகுப்புகளை நடத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை மாதிரிப் பள்ளியாக தேர்வு செய்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், நிகழாண்டு முதல் மழலையர் வகுப்புகளான எல்கேஜி வகுப்புகளுக்கு 70 இடங்களுக்கும், யுகேஜி வகுப்புகளுக்கு 70 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளன. இவர்களுக்கு, தனியார் பள்ளிகளைப் போல ஆங்கில வழியில் இலவசக் கல்வி வழங்கப்படும்.
திறன்மிகு வகுப்பறைகள் தயார்: ஜூன் மாதம் முதல் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இந்த மாதிரிப் பள்ளியில் இரு பாலருக்கும் தொடர்ச்சியாக 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் நடைபெறும். அதன் பிறகு, 6 முதல் பிளஸ் 2 வரை மாணவிகளுக்கு மட்டும் ஆங்கில வழி வகுப்புகள் நடைபெறும். இங்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக, திறன்மிகு வகுப்பறைகள், நவீன ஆய்வுக் கூடம், நூலகம் உள்ளிட்ட வசதிகளுடன் ஆங்கில வழி சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
இதற்காக, விழுப்புரம் அரசு மகளிர் பள்ளி இரண்டாம் தளத்தில் திறன்மிகு வகுப்பறைகள் தயாராகி வருகின்றன. 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 7 வகுப்புகளுக்கு 7 அறைகளில் திறன்மிகு வகுப்பறைகளுக்கான கட்டமைப்புகள் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வகுப்பறையிலும் இரு அதிநவீன பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, ஆசிரியர்கள் பாடங்களை எழுதும் கரும்பலகைக்கு பதிலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய பசுமைப் பலகை (கிரீன் போர்டு) அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான கரும் பலகையில் சாக்பீஸால் எழுதும் போதும், அழிக்கும்போதும் அதன் துகள்கள் பறப்பது போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பு, இந்த பசுமைப் பலகையில் ஏற்படுவதில்லை. மற்றொன்று ஒளித் திரை கருவியுடன் (புரொஜக்டர்) கூடிய அதிநவீன மின்னணு பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பலகையில் மார்க்கர் மூலம் எழுதலாம், அழிக்கலாம். எழுதும் பாடங்களும், கணினியில் பதிவாகிவிடும். இணைய வழி இணைப்புடன் கூடிய கணினி மூலம் இந்த அதிநவீன பலகைகள் இயங்கும். யூடியூப், இணைய வழி பாடங்களையும் நேரடியாக இதன் மூலம் நடத்த முடியும். வெளியூர்களிலிருந்து பாடங்கள் எடுப்பதையும் கண்காணிக்க முடியும். வைஃபை, ஒலிபெருக்கிகள் இணைப்பு வசதிகளும் இந்த திறன்மிகு வகுப்பறையில் இடம்பெற்றுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு
இணையாக...: இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி கூறியதாவது: தனியார் பள்ளி, கல்லூரிகளில் உள்ளதைப் போல விழுப்புரம் அரசு மாதிரிப் பள்ளியில் கட்டமைக்கப்படும் திறன்மிகு வகுப்பறைகளில் இணைய வழி தொடர்பில், கணினி சார்ந்த ஒளித்திரை கருவி வழியாக வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்த முடியும். மாணவிகளுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பக் கல்வியை வழங்க முடியும். பாடத் திட்டம் சார்ந்த படங்களையும், எளிமையாக பதிவிறக்கம் செய்து, ஒளித்திரை கருவி மூலம் காண்பிக்க முடியும். எப்போதும் போல சாதாரணமாக பாட வகுப்புகளையும், சாக்பீஸ், மார்க்கர் மூலம் மின்னணு பலகையில் எழுதியும் வகுப்புகளை எடுக்கலாம். தினசரி நடத்தப்படும் பாடங்களும் இதில் பதிவாகிவிடும். நடத்திய பாடங்களை மீண்டும் எடுத்து, காட்சிப் படுத்தி எளிமையாக வகுப்புகளை நடத்தவும் முடியும். தேர்வு காலங்களில் முந்தைய வகுப்புகளை நினைவுபடுத்த இது ஏதுவாகும்.
இதுபோன்ற தொழில் நுட்பம் சார்ந்த கட்டமைப்புகள் மூலம், மாதிரிப் பள்ளி மாணவிகளுக்கு மேம்படுத்தப்பட்ட கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதலில் 7 வகுப்புகள் தயாராகி வருகின்றன. தொடர்ந்து, கொடையாளர்கள் மூலம் நிதி பெற்று, கூடுதல் பொலிவுறு வகுப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...