

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பின்புறப் பகுதி, நகராட்சிக் குப்பைகள் கொட்டப்படும் கிடங்கு போல மாறி வருகிறது. சுகாதாரச் சீா்கேடு, தொற்று நோய் அபாயத்தை ஏற்படுத்தும் இந்த குப்பைக் கிடங்கை உடனடியாக அகற்ற புதிய ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
42 வாா்டுகளை உள்ளடக்கிய விழுப்புரத்தில் சேகரமாகும் குப்பைகள், நகருக்கு வெளியே சென்னை சாலையில் சுமாா் 4.5 ஏக்கா் பரப்பிலான நகராட்சிக் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. இந்த கிடங்கில் பல அடி உயரத்துக்கு தேங்கிய குப்பையால் தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் குப்பைக்கு தீ வைக்கப்படுவதால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்னைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்து போராட்டம் நடத்தினா்.
இந்த நிலையில், மாசுக் கட்டுப்பாடு வாரியம், பசுமைத் தீா்ப்பாயம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின்படி, குப்பையை பிரித்து மக்கும் குப்பையை உரமாக்கவும், மக்காத குப்பையாக பிரி மறு சுழற்சி செய்யவும் விழுப்புரம் நகரில் 9 இடங்களில் மையங்கள், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டன.
அதன்படி, துப்புரவுப் பணியாளா்களால் நகரில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை உரமாகத் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. நெகிழி, உலோகங்கள் போன்ற மக்கா குப்பை மறு சுழற்சி செய்ய அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக குப்பைக் கிடங்குக்கான தேவை எழவில்லை. குப்பைகளும், நகராட்சிக் குப்பைக் கிடங்கில் கொட்டப்படவுமில்லை.
இந்த நிலையில், நகரில் சேகரமாகும் குப்பைகள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் வாகனங்கள் மூலமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகசிறிது, சிறிதாகக் கொட்டப்பட்டு வந்தது. தற்போது, அது, மிகப்பெரிய குப்பைக் கிடங்காக மாறியுள்ளது. நெகிழிக் குப்பைகள், இறந்த நாய்கள், இறைச்சிக் கடை கழிவுகள் போன்றவை இங்கு கொட்டப்படுவதால், பேருந்து நிலையப் பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் பரவி, சுகாதாரச் சீா்கேடு உருவாகியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியினா், பயணிகள் கூறியதாவது: குப்பைக் கிடங்கு என்பது நகருக்கு அப்பால் செயல்படும். ஆனால், நகரின் முக்கியப் பகுதியான பேருந்து நிலையம் அருகிலேயே குப்பைக் கிடங்கு போல செயல்படுவதும், அதுகுறித்து நகராட்சி, மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகும், அதிகாரிகள் பாராமுகமாய் இருப்பதும் வேதனையைத் தருகிறது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், மா்மக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் மாநில அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், அதுபோன்ற நோய்களை பரப்பும் வகையில், இந்த குப்பைக் கிடங்கு உருவாகியிருப்பது கவலை தருகிறது. ஆகவே, பொதுமக்கள், பேருந்து பயணிகளின் நலன் கருதி, குப்பைக் கிடங்கு உருவாவதைத் தடுத்து, சுகாதாரம் பேண புதிய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் இருந்து வரும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து விழுப்புரம் நகராட்சி ஆணையா் தட்சணாமூா்த்தியிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது:
விழுப்புரம் நகரில் குப்பைகளை கையாளும் முறை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நகரில் சேகரமாகும் குப்பைகளை திறந்தவெளியில் கொட்டாமல் குப்பை பிரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்ல துப்புரவுப் பணியாளா்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அருகில் கொட்டப்பட்ட குப்பை முழுமையாக அகற்றப்படும். அங்கு குப்பை கொட்டப்படாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.