விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை பதிவு செய்யும், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கான நவீன கையடக்க கருவிகளின் பற்றாக்குறையால் அபராத நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வழக்குகள் காவல் துறை சார்பில் பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதில் காகிதத்தின் பயன்பாட்டை தவிர்க்கவும், இணைய வழி, ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும் பிரத்யேக கையடக்கக் கருவி, காவல் துறைக்கு வழங்கப்பட்டது.
அந்தக் கருவியில் தலைக்கவசம் அணியாமை, மது அருந்தி வாகனம் ஓட்டுதல் போன்ற 70-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்ய முடியும். விதிமீறல்களுக்கான அபராதத்தை அந்தக் கருவியின் வாயிலாக ஏடிஎம் அட்டை வாயிலாக உடனடியாகச் செலுத்த முடியும். இல்லையென்றால், வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிறிய ரசீதைக் கொண்டு, ரொக்கமில்லா பரிவர்த்தனையாக ஏடிஎம் அட்டை, இணைய வழி வங்கிக் கணக்கு, அரசு இ-சேவை மையங்கள் வாயிலாகவும் அபராதம் செலுத்தலாம்.
இந்த புதிய முறையில், வழக்குப் பதிந்து, அபராதம் வசூல் செய்வதற்காக விழுப்புரம் மாவட்ட காவல் துறையினரிடம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி 40 புதிய கருவிகள் வழங்கப்பட்டன. அன்று முதல் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வழக்குகள் புதிய முறையில் பதிவு செய்யப்படுகின்றன.
மாவட்டத்தில் 49 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 7 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் உள்ளன. ஆனால், வழங்கப்பட்ட புதிய கருவிகளோ, காவல் நிலையங்களின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை. மேலும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் போன்ற அதிகாரிகள் உள்ளனர். இதனால், அந்தக் கருவியை பயன்படுத்தி ஒரு நேரத்தில், யாராவது ஒருவர் மட்டும் வழக்குப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதுபோன்ற சிக்கலால் புதிய கருவிகளை மட்டுமே பயன்படுத்தி, அதிக வழக்குகள் பதிவு செய்வது என்பது சாத்தியமில்லாமல்போனது.
இதனால், வேறு வழியில்லாமல் பழைய முறைப்படி காதிதத்தில் எழுதி வழக்குப் பதிவு செய்யும் முறையும் பின்பற்றப்பட்டது. ஆகவே, அந்தப் பிரச்னைக்கு தீர்வு காண கூடுதல் கருவிகள் வாங்கப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஏனெனில், போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யும் கருவிகள் விழுப்புரம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக.23ஆம் தேதி முதல் செப்.15 வரை மொத்தம் 24,807 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. இதில், ரொக்கமில்லா பண பரிவர்த்தனை மூலமாக 5,918 வழக்குகளில் ரூ.6,95,435 வரை உடனடியாக அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும், 18,889 வழக்குகளில் ரூ.26,34,975 வரை அபராதம் செலுத்த, வழக்குப் பதிவு செய்யப்பட்ட ரசீதுகள் வழங்கப்பட்டன.
ஆனால், இந்தக் கருவிகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர்த்து ஏராளமான வழக்குகளை காகிதத்திலும் போலீஸார் பதிவு செய்துள்ளனர். ஆகையால், புதிய கருவியின் தேவை கூடுதலாக உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து எஸ்.பி. ஜெயக்குமார் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்ய முதல் கட்டமாகத்தான் 40 புதிய கருவிகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் தேவை இருப்பதால், கூடுதலாக கருவிகளை கேட்டுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.