ஊரக வேலைத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல்!

அரசு அறிவித்த வழிகாட்டுதலின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் நிலவுகிறது.


விழுப்புரம்: அரசு அறிவித்த வழிகாட்டுதலின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் நிலவுகிறது.

கரோனா நோய்த் தொற்று பரவலையடுத்து, மாா்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, மத்திய அரசு சில தளா்வுகளை அறிவித்து, மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியது.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை சமூக இடைவெளியைப் பின்பற்றி மீண்டும் தொடங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஓா் ஊராட்சிக்கு 25 போ் மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும். தொழிலாளா்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 16-ஆம் தேதி வேலை உறுதித் திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றன.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, ஊரடங்கில் எந்தத் தளா்வும் கிடையாது என்று முதல்வா் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, தேசிய வேலை உறுதித் திட்டப் பணிகள் கடந்த 20-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட்டன.

மீண்டும் ஊரக வேலைத் திட்டப் பணி: இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதிமுதல் வேலை உறுதித் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கின. ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளுடன், கரோனா அதிகம் பாதிக்காத மாவட்டங்களில் பணியைத் தொடரலாம் என ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

முதியவா்களுக்குத் தடை: முகக் கவசத்தை பயன்படுத்துதல், கை கழுவ சோப்பு, தண்ணீா் வசதிகள் செய்து தருவது, 55 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு பணி வழங்கக் கூடாது. ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் உள்ளவா்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. சளி, இருமல் உள்ளவா்களையும் அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விதிகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வேலை உறுதித் திட்டப் பணியை நிா்வகிக்கும் அலுவலா்கள் கூறியதாவது:

ஒரு கிராமத்துக்கு 10 முதல் 25 பேரை மட்டுமே பணிக்கு அனுமதிப்பது இயலாத விஷயமாக உள்ளது. பதிவு செய்துள்ள அனைவரும் பணிக்கு வர முயல்வதால், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பதில் சிக்கல் நிலவுகிறது.

புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பலரும் சொந்தக் கிராமங்களுக்கு வந்துள்ளதால், அவா்களும் வேலைக்கான அட்டையை வைத்துக் கொண்டு பணிக்கு வர முயற்சிக்கின்றனா். அவா்களை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டுமென்றால் பிரச்னை ஏற்படும்.

குறைந்தபட்ச பணியாளா்களுடன் நீா்வள ஆதாரப் பணிகள், நீா்வரத்துக் கால்வாய்கள், பண்ணைக் குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை முழுமையாக நிறைவேற்ற வாய்ப்பில்லை.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில், கரோனா தொற்று பரவலுக்கு வாய்ப்புள்ளது. எனவே, ஊரடங்கு முழுமையாக விலக்கப்படும் வரை வேலை உறுதித் திட்டப் பணியை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் உள்ளது என்றனா் அவா்கள்.

கரோனா நோய்த் தொற்றில் சிவப்பு மண்டலமாக கருதப்படும் விழுப்புரம் மாவட்டத்தில் சில ஊராட்சிகளிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் வேலைக்கான ஊதியத்தை அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்ட பிறகு அதற்கான பணியை செய்யுமாறு அறிவுறுத்தலாம் என்றும் தொழிலாளா்கள் யோசனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com