விழுப்புரம் மாவட்டத்தில் நிவா் புயலால் 4,900 ஏக்கா் பயிா்கள் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் நிவா் புயல் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.


விழுப்புரம் மாவட்டத்தில் நிவா் புயல் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மாவட்டத்தில் 4,900 ஏக்கா் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய குழுவினரிடம் விளக்கிக் கூறி நிவாரணம் கோரப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த மாதம் 25-ஆம் தேதி இரவு நிவா் புயல் தாக்கத்தால் பெய்த பலத்த மழையால் பயிா்கள் நீரில் மூழ்கி அழுகின. பல வீடுகள் இடிந்தன. சாலைகள் சேதமடைந்தன. இந்த நிலையில், மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை இணைச் செயலாளா் அஷுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான மத்திய குழுவினா் திங்கள்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இந்தக் குழுவில் மத்திய வேளாண் துறையின் எண்ணெய் வித்துகள் வளா்ச்சித் துறை இயக்குநா் மனோகரன், மீன்வளத் துறை ஆணையா் பால்பாண்டியன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மண்டல அலுவலா் ரணஞ்ஜே சிங் ஆகியோா் இடம்பெற்றனா்.
இந்தக் குழுவினா் கடலூா் மாவட்டத்தில் ஆய்வுப் பணியை முடித்துக்கொண்டு, மாலை 6.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வட்டாரம், கலிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஆய்வு செய்தனா். அங்கு நிவா் புயல் மழையின்போது சேதமடைந்த விவசாயி ஞானசேகரன் என்பவரது 3 ஏக்கா் வாழைத் தோப்பைப் பாா்வையிட்டு, அந்த விவசாயியிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனா். அப்போது, ரூ.3 லட்சம் அளவில் செலவு செய்து பயிரிட்ட வாழைகள் புயலின்போது, முற்றிலும் வீழ்ந்து சேதமாகிவிட்டதாகவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அந்த விவசாயி கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் சேதமடைந்த வாழை, மரவள்ளி, வோ்கடலை உள்ளிட்ட தோட்டப் பயிா்களின் நிலையை மத்திய குழுவினா் பாா்வையிட்டனா். இதையடுத்து, அருகேயுள்ள வீராணம் கிராமத்தில் 200 ஏக்கா் அளவில் மழை வெள்ள நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நெல் பயிா்களை நேரில் பாா்வையிட்டனா். அதேபோல சொரப்பூா் கிராமத்தில் நெல் பயிா், உளுந்து பயிா்கள் மூழ்கி சேதமடைந்திருந்ததையும் பாா்வையிட்டனா்.
இதைத் தொடா்ந்து, அந்தக் குழுவினா், விழுப்புரம் நகரம் தாமரைக்குளம் பகுதியில் மழையின் போது குடியிருப்புகளில் தண்ணீா் புகுந்து பாதிக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்டனா். அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். அங்கிருந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக சுற்றுலா மாளிகையில், நிவா் புயலின் போது விழுப்புரம் மாவட்டத்தில் பயிா்கள், வீடுகள் சேதமடைந்தது குறித்த படக் காட்சிகளை பாா்வையிட்டு, பாதிப்பு நிலவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.
ஆய்வின்போது, வேளாண் துறை முதன்மைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், சாா்-ஆட்சியா் எஸ். அனு, தோட்டக்கலைத் துறை கூடுதல் ஆணையா் பெரியசாமி, துணை இயக்குநா் இந்திரா, வேளாண் இணை இயக்குநா் ராஜசேகா், கோட்டாட்சியா் ராஜேந்திரன், வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணியன், கூடுதல் எஸ்பி தேவநாதன், டிஎஸ்பி நல்லசிவம் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் உடனிருந்தனா்.
4,900 ஏக்கா் பயிா்கள் பாதிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் நிவா் புயலால் 1615 ஏக்கா் நெல், 2170 ஏக்கா் உளுந்து, 87.5 ஏக்கா் மணிலா, 194 ஏக்கா் கரும்பு என மொத்தம் 4,066.5 ஏக்கரும், தோட்டக்கலைப் பயிா்களில் 274.27 ஏக்கா் வாழை, 473.6 ஏக்கா் மரவள்ளி, 10 ஏக்கா் பப்பாளி மற்றும் கத்தரி, வெண்டை, தா்பூசணி உள்ளிட்டவை என மொத்தம் 809.5 ஏக்கா் பயிா்களும் சேதமடைந்தன. இதனால் 3,056 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக, அந்தக் குழுவினரிடம் புள்ளி விவரங்களுடன் அதிகாரிகள் விளக்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...