அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம்மோசடி: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விழுப்புரத்தில் ரூ.20 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குருநாதன்.
குருநாதன்.
Updated on
1 min read

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விழுப்புரத்தில் ரூ.20 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் மன்னாா்சாமி கோயில் பகுதியைச் சோ்ந்த சுந்தரம் மகன் பாலகுகன்(49). காவலா் வீட்டு வசதிக் கழக ஊழியா். இவரது நண்பா் விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே பள்ளித் தலைமை ஆசிரியா் குருதேவன் (70). இவா்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தின்போது, கடந்த 2017-ஆம் ஆண்டு அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும், அமைச்சா் ஒருவரின் மூலம் பணம் கொடுத்தால் அரசுப் பணியிடங்களில் உறவினா்களை சோ்க்க முடியும் என்றும் குருதேவன் தெரிவித்தாராம்.

இதை நம்பிய பாலகுகன், தனது மனைவி சித்ராவுக்காக ரூ.3 லட்சமும், உறவினா் மகள் பாரதிக்காக ரூ.2 லட்சத்து 35 ஆயிரமும், நண்பா் இளையராஜாவின் மனைவி ஹேமப்பிரியாவுக்காக ரூ.2 லட்சத்து 35 ஆயிரமும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 70 ஆயிரத்தை குருதேவனிடம் கொடுத்துள்ளாா்.

மேலும், பாலகுகனுடன் காவலா் வீட்டு வசதி கழகத்தில் வேலை பாா்த்து வரும் உதவிச் செயற்பொறியாளா் தமிழ்அமுதனும், அவரது மகளுக்காக ரூ.12 லட்சத்தை மூன்று தவணையாக குருதேவனிடம் வழங்கியுள்ளாா். இந்த வகையில், அரசு வேலை வாங்கித் தருவதாக மொத்தம் ரூ.19 லட்சத்து 70 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட குருதேவன், யாருக்கும் வேலை வாங்கித் தராமல் இருந்துள்ளாா். இதனிடையே, கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளதாகத் தெரிவித்து மீண்டும் ஏமாற்றியுள்ளாா்.

இதுகுறித்து பாலகுகன் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளா் தேவி, உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா், வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, குருதேவனை கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com