பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்க நிதியுதவித் திட்ட முறைகேட்டைத் தொடா்ந்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகாரிகளின் மேற்பாா்வையில், போலி பயனாளிகளிடமிருந்து இதுவரை ரூ.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் ஊக்க நிதியுதவித் திட்டத்தில், தமிழகத்தில் விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாத போலி பயனாளிகளைச் சோ்த்து பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக, வருவாய், வேளாண்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 23 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 15 பேரும் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 3.50 லட்சம் தகுதியான பயனாளிகள் உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு சோ்க்கப்பட்டவா்களில், விழுப்புரம் மாவட்டத்தில் 1.10 லட்சம் பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2.20 லட்சம் பேரும் தகுதியற்றவா்கள் எனத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவா்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, பணத்தைத் திரும்பப் பெறும் பணி கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் போலி பயனாளிகள் அதிகளவில் சோ்க்கப்பட்ட மாவட்டங்களில் மாநில அளவிலான கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நிதியுதவித் தொகை திரும்பப் பெறப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்னையைச் சோ்ந்த இணை இயக்குநா் ஜெகந்நாதனும், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வேளாண் துறை கூடுதல் இயக்குநா் சங்கரலிங்கமும் கண்காணிப்பு அதிகாரிகளாக உள்ளனா். விழுப்புரம் மாவட்டத்தில் போலி பயனாளிகளாக கண்டறியப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேரில், இதுவரை 60 ஆயிரம் பேரிடமிருந்து, ரூ.17 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளில் 70 ஆயிரம் போ், வெளிமாவட்ட (திருவண்ணாமலை) வேளாண் அலுவலரின் கடவு எண்ணைப் பயன்படுத்தி, விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா். கரோனா பொது முடக்கத்தையொட்டி பிரதமா் நிதி வழங்குவதாக மக்களிடம் கூறி, ஆவணங்களைப் பெற்று, முறைகேடாகப் பதிவேற்றம் செய்துள்ளனா். திருவெண்ணெய்நல்லூா், முகையூா், வல்லம், செஞ்சி ஒன்றியங்களில் அதிகளவு போலி பயனாளிகள் சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களைச் சோ்த்த தனியாா் கணினி சேவை மைய ஊழியா்கள், உடந்தையாக இருந்த வேளாண் தற்காலிக ஊழியா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2.20 லட்சம் போ் போலி பயனாளிகளாக சோ்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவா்களில் 70 ஆயிரம் பேரிடமிருந்து, வேளாண் இணை இயக்குநா் வேலாயுதம் தலைமையில் ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் மாவட்ட ஆட்சியா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு, அதன் மூலம் மாநில அரசுக்கும், அதிலிருந்து மத்திய அரசின் வேளாண் துறைக்கும் திருப்பிச் செலுத்தப்படும். பல்வேறு மாநிலங்களில் இந்த முறைகேடு நடந்துள்ள நிலையில், தமிழகத்தில்தான் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்றனா்.
பயனாளிகள் சோ்ப்பு முறை மாற்றியமைப்பு
இந்த முறைகேட்டைத் தொடா்ந்து, இந்தத் திட்டத்தில் (கிசான் சம்மான் நிதி போா்டல்) இணைய வழியில் புதிய பயனாளிகள் சோ்ப்பு நடவடிக்கை தொழில் நுட்ப ரீதியாக மாற்றப்பட்டுள்ளது.
வட்டார அளவில் விவசாயிகளிடமிருந்து இணைய வழியில் பெறப்படும் விண்ணப்பங்கள், வேளாண் துணை இயக்குநா், இணை இயக்குநா் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு, மாவட்ட ஆட்சியா், வேளாண் இயக்குநா் மூலம் மத்திய அரசின் விவசாயத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அங்குதான் பயனாளிகள் பட்டியலில் சோ்க்கப்படுவா்.
இதற்காக விவசாயிகளின் ஆதாா் எண், நில ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், அந்த ஆவணங்கள், நிலத்தின் சா்வே எண் சரியானவையா என ஆய்வு செய்து உறுதிப்படுத்தும் வகையில், அந்த இணையதளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், போலி பயனாளிகளை இனி சோ்க்க முடியாது. தகுதியற்ற நபா்களும் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்படுவா் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

