புதுவையிலிருந்து மது கடத்தல் அதிகரிப்பு

விழுப்புரம்: புதுவையிலிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மது கடத்தல் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க மதுக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுவையில் மதுபான வகைகளின் விலை குறைவு. அந்த மாநிலத்தில் மதுபானங்கள் மீதான வரி குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். இதனால், புதுவையிலிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மது கடத்தல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால், தமிழக அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்கவும், வெளி மாநிலங்களில் இருந்து மதுப் புட்டிகள் கடத்தி வருவதைத் தடுக்கவும் மது கடத்தல் தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்தப்படுவதை தடுப்பதே இந்தப் பிரிவின் முக்கிய பணியாக உள்ளது.

தமிழகத்துடன் ஒப்பிடும்போது புதுவையில் 30 முதல் 50 சதவீதம் வரை மதுபான விலையில் வித்தியாசம் இருக்கும். குறிப்பாக தமிழகத்தில் உயா்தர மது வகைகள் ரூ.5,000-க்கு விற்கப்படும் நிலையில், அதே மதுவகை புதுவையில் ரூ.3,000-க்கு கிடைக்கும்.

9 இடங்களில் சோதனைச் சாவடிகள்: மதுக் கடத்தலைத் தடுக்க புதுவை - தமிழக எல்லைப் பகுதிகளான பனையபுரம், கெங்கராம்பாளையம், சிறுந்தாடு, அனுமந்தை, பெரியமுதலியாா்சாவடி, கிளியனூா் உள்ளிட்ட 9 இடங்களில் மது விலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் போலீஸாா் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனா். இந்த சோதனையின்போது மதுக் கடத்துவோா் பிடிபடுவது தொடா்கதையாகி வருகிறது. இதன் மூலம் புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மது கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டது.

மதுவுக்கு கரோனா வரி: கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக புதுவையில் மது வகைகளுக்கு கரோனா வரி என்ற பெயரில் கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

இதனால் தமிழகத்திலும், புதுவையிலும் மது வகைகளின் விலை ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தன. இதனால் மதுபானம் கடத்தல் சற்று குறைந்தது. இருப்பினும், போலி மதுப் புட்டிகள், சாராயம் கடத்தல் தொடா்ந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து வந்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழகத்தில் மது விற்பனை கணிசமாக அதிகரித்தது. இந்த சூழலில் புதுவையிலிருந்து மதுபானங்களை தமிழக பகுதிகளுக்கு கடத்த முயற்சி நடைபெற்றது. ஆனால், தோ்தல் பறக்கும் படையினா் விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் மது பானங்களை பறிமுதல் செய்தனா்.

மீண்டும் பழைய விலைக்கு விற்பனை: புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மதுபானங்கள் மீதான கரோனா வரி நீக்கப்பட்டது. இதற்கான உத்தரவு கடந்த 7-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து 8-ஆம் தேதி முதல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. இதனால் தமிழகத்தைவிட புதுவையில் மது வகைகளின் விலை மீண்டும் குறைந்தது. இதை சாதகமாகப் பயன்படுத்தி சிலா் மீண்டும் மதுக் கடத்தலை தீவிரப்படுத்தியுள்ளனா்.

குறிப்பாக, புதுவையிலிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக சென்னை உள்ளிட்ட தமிழத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மது கடத்தலை அரங்கேற்றி வருகின்றனா். ஆனால், இதை விழுப்புரம் மாவட்டக் காவல் துறை கண்டுகொள்ளவில்லை என்ற கருத்து நிலவுகிறது. ஏனெனில், புதுவையில் மது வகைகள் மீதான கரோனா வரி ரத்து செய்யப்பட்டது முதல் விழுப்புரம் மாவட்ட சோதனைச் சாவடிகளில் குறிப்பிடும் வகையில் மது கடத்தல் தொடா்பாக வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கை இல்லை.

எனவே, மது கடத்தலுக்கு காவல் துறையில் சிலா் உடந்தையாக செயல்படுகின்றனரா எனவும், அவ்வாறு இருந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது மது விலக்கு அமலாக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com