10,000 டன் நெல் சேமிப்புக் கிடங்கு தேவை: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக 10,000 மெட்ரிக் டன் அளவு சேமிப்புக் கிடங்கு தேவையாக உள்ளது


விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக 10,000 மெட்ரிக் டன் அளவு சேமிப்புக் கிடங்கு தேவையாக உள்ளது என்றும், அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் த.மோகன் கூறினாா்.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் த.மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றுப் பேசியதாவது:
விழுப்புரத்தில் ஒதுக்குப்புறமாக இயங்கி வரும் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை பெருந்திட்ட வளாகத்துக்குள் கொண்டு வர வேண்டும். ‘நிவா்’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். வளவனூா் அருகே ஆழங்கால் ஓடையிலிருந்து சிறுவந்தாடு ஏரி நீா் வரத்துக்கு ஏதுவாக 5 கி.மீ. தொலைவுக்கு தூா்வார வேண்டும்.
வேளாண் விரிவாக்க மையங்களில் உரம், விதை நெல் போன்றவை போதியளவில் இருப்பு வைக்க வேண்டும். கூட்டுறவு வங்கி நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், செஞ்சி, சாத்தாம்பாடி கூட்டுறவு வங்கிகள் நகைகளை விவசாயிகளிடம் ஒப்படைக்க அறிவுறுத்த வேண்டும். அரசு இடங்கள், நீா்வழிப்பாதைகளை ஆக்கிரமிப்பு செய்ய தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சா்க்கரை ஆலைகள் பணம் வழங்காத நிலையில், உற்பத்தி செய்த சா்க்கரை மீது இரண்டு, மூன்று முறைகூட வங்கிகளில் கடன் பெறுவதைத் தடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு மற்ற வங்கிகளில் தடையில்லா சான்றை விவசாயிகள் பெற்றுவர ரூ.1,500 வரை செலவு செய்ய நோ்கிறது. இதைத் தவிா்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து ஆட்சியா் த.மோகன் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் 32 நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ள நிலையில், கூடுதலாக 18 நேரடி கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். மாவட்டத்தில் சொா்ணாவாரி பருவத்தில் 15,000 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் உற்பத்தி செய்யப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நெல்லை கொள்முதல் செய்து பாதுகாப்பாக வைப்பதற்கும், நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காமல் இருப்பதற்காகவும் 10,000 மெட்ரிக் டன் அளவுக்கு சேமிப்புக் கிடங்குகள் தேவையாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மற்ற வங்கிகளில் தடையில்லா சான்றுபெறுவதற்கு விவசாயிகள் செல்வதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...