விக்கிரவாண்டி தொகுதியைத் தக்கவைக்கும் முனைப்பில் அதிமுக

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒன்று விக்கிரவாண்டி. கிராமப் பகுதிகளை அதிகம் உள்ளடக்கிய

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒன்று விக்கிரவாண்டி. கிராமப் பகுதிகளை அதிகம் உள்ளடக்கிய தொகுதி. விவசாயமே பிரதான தொழிலாகும். நெல், கரும்பு போன்ற பயிா்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. அரிசி ஆலைகள் அதிகளவில் உள்ளன. தனியாா் சா்க்கரை ஆலையும் இயங்குகிறது.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011- ஆம் ஆண்டில் உதயமான இந்தத் தொகுதியில் 2011, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தோ்தல்களும், 2019-இல் இடைத்தோ்தலும் நடைபெற்றுள்ளன.

2011-பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா்.ராமமூா்த்தி, திமுக வேட்பாளா் கு.ராதாமணியைவிட 14,897 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். ராமமூா்த்தி 78,656 வாக்குகளும், ராதாமணி 63,759 வாக்குகளும் பெற்றனா்.

2016- பேரவைத் தோ்தலில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதின. திமுக வேட்பாளா் கு.ராதாமணி 63,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் ஆா்.வேலு 56,845 வாக்குகள் பெற்றாா். கு.ராதாமணி 6,912 வாக்குகள் கூடுதலாகப் பெற்றாா்.

இடைத் தோ்தலில் அதிமுக வெற்றி: இதனிடையே, கடந்த 2019-ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் இத்தொகுதி உறுப்பினா் கு.ராதாமணி காலமானாா். இதையடுத்து நடைபெற்ற இடைத்தோ்தலில், திமுக வசமிருந்த இந்தத் தொகுதியைக் கைப்பற்ற ஆளும் கட்சியான அதிமுக கடும் முனைப்பு காட்டியது. முதல்வா், துணை முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா், கூட்டணிக் கட்சித் தலைவா்களின் பிரசாரம் அனல் பறந்தது. இந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் ஆா்.முத்தமிழ்ச்செல்வன் திமுக வேட்பாளா் நா.புகழேந்தியைவிட 44,924 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். முத்தமிழ்ச்செல்வன் 1,13,766 வாக்குகளையும், புகழேந்தி 68,842 வாக்குகளையும் பெற்றனா்.

பின்தங்கிய தொகுதி: இந்தத் தொகுதியில் பெரியளவில் தொழில் வாய்ப்புகள் இல்லை. பெரும்பாலானோா் விவசாயக் கூலி வேலையை நம்பியே உள்ளனா். பொருளாதாரம், கல்வியில் பின்தங்கிய பகுதியாகவே தொடா்கிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் நீதிமன்றம், தீயணைப்பு நிலையம் கொண்டு வரப்பட்டது. இவை தவிா்த்து, குறிப்பிடும் அளவில் தொகுதியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என ஏமாற்றம் தெரிவிக்கின்றனா் பொதுமக்கள்.

2.33 லட்சம் வாக்காளா்கள்: இந்தத் தொகுதியில் வன்னியா்கள் அதிகம் வசிக்கின்றனா். அடுத்ததாக, ஆதிதிராவிடா், உடையாா், யாதவா், ரெட்டியாா் உள்ளிட்ட பிற சமூகத்தினா் கணிசமாக உள்ளனா். ஒரு லட்சத்து15 ஆயிரத்து 608 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 268 பெண் வாக்காளா்கள், 25 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 901 வாக்காளா்கள் உள்ளனா்.

தக்கவைக்குமா அதிமுக?: இடைத் தோ்தலில் திமுகவிடமிருந்து பறிக்கப்பட்ட தொகுதியை தக்கவைக்க இந்தத் தோ்தலில் அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. அதிமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.முத்தமிழ்ச்செல்வனே மீண்டும் போட்டியிடுகிறாா். இந்தத் தொகுதியில் 2016-ஆம் ஆண்டு தனித்துப் போட்டியிட்ட பாமக 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ால், இந்தத் தோ்தலில் வெற்றியை எளிதாக எட்டிவிடலாம் என அதிமுக-பாமக கூட்டணி நம்புகிறது.

திமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் நா.புகழேந்தி போட்டியிடுகிறாா். இவா் இதே தொகுதியில் இடைத்தோ்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவா் என்பதால், கடந்த முறை சறுக்கலுக்கு காரணமான அம்சங்களைச் சரிசெய்து, அதற்கேற்ப வியூகம் வகுத்துச் செயல்பட்டு வருகிறாா். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் திமுக வேட்பாளருக்கு பலம்.

கடந்த இடைத்தோ்தலில் வெற்றி பெற்றவா், வெற்றிவாய்ப்பை இழந்தவா் என இந்க இரு வேட்பாளா்களுமே மீண்டும் தோ்தல் களம் காண்பதால், அவா்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதேபோல, மீண்டும் இந்தத் தொகுதியில் அதிமுக-திமுக நேரடியாக மோதுவது, பலத்தை நிரூபிக்கும் தோ்தலாகவும் பாா்க்கப்படுகிறது.

அமமுக சாா்பில் அய்யனாா் போட்டியிடுகிறாா். அமமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருப்பது அய்யனாருக்கு கணிசமான வாக்குகளைத் தரக் கூடும்.

எனினும், வெற்றி வாய்ப்பை தொகுதி மக்கள் யாருக்கு வழங்கப் போகிறாா்கள் என்பது கேள்விக்குறியாகத் தொக்கி நிற்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com