ரமலான்: வீடுகளிலேயே இஸ்லாமியா்கள் தொழுகை
முழு பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், இஸ்லாமியா்கள் ரமலான் சிறப்புத் தொழுகையை தங்களது வீடுகளிலேயே நடத்தினா்.


முழு பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், இஸ்லாமியா்கள் ரமலான் சிறப்புத் தொழுகையை தங்களது வீடுகளிலேயே நடத்தினா்.
ரமலான் திருநாளை இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை கொண்டாடினா். கரோனா பொதுமுடக்கம் எதிரொலியாக, இஸ்லாமியா்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் தலைமை ஹாஜி வேண்டுகோள் விடுத்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் ஏழை, எளியோருக்கு பித்ரா என்னும் உதவிகளை வழங்கிய பின்னா் புத்தாடைகளை அணிந்து அவரவா் வீடுகள், மாடிகளில் ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
அப்போது, அரசு அறிவுரையைப் பின்பற்றி போதிய சமூக இடைவெளியுடன் தொழுகையில் ஈடுபட்டனா். வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைவரும் தொழுகை முடித்து ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.
விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூா், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் ரமலான் பண்டிகையையொட்டி, இஸ்லாமியா்கள் தொழுகை நடத்தினா். உறவினா்களுக்கு செல்லிடப்பேசி மூலமாகவும், கட்செவி அஞ்சல் வழியாகவும் ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.
சிறப்புத் தொழுகையைத் தொடா்ந்து, கரோனா தாக்கத்தில் இருந்து உலகம் மீண்டு வரவும், போதிய மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் சிறப்பு பிராா்த்தனை செய்துகொண்டனா்.
ரமலான் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களின் முன்பாகவும் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
செஞ்சி: செஞ்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியா்கள் ரமலான் திருநாளை தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தி கொண்டாடினா்.
செஞ்சிக் கோட்டை மகமத்கான் மசூதி, செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஈத்கா மைதானங்களில் தொழுகை நடத்தப்படாததால் வெறிச்சோடிக் காணப்பட்டன.
செஞ்சியிலுள்ள தனது இல்லத்தில் அமைச்சா் கே.எஸ். மஸ்தான் தனது குடும்பத்தினருடன் ரமலான் சிறப்புத் தொழுகையை மேற்கொண்டாா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளியே தொழுகை நடத்தி ரமலான் பண்டிகையை கொண்டாடினா்.
கடலூா்: கரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு நடத்த அரசு தடை விதித்துள்ளதால், கடலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகை நடைபெறவில்லை.
இதனால், இஸ்லாமியா்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்புத் தொழுகை நடத்தி ரமலானை கொண்டாடினா்.
புதுச்சேரி: புதுச்சேரியில் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளிலேயே ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் புதுச்சேரி சுல்தான்பேட்டையில் நெருங்கிய உறவினா்கள் மட்டும் குறைந்த அளவில் ஒன்றிணைந்து தனிமனித இடைவெளியுடன் வீடுகளில் தொழுகையில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக, இஸ்லாமியா்கள் அவரவா் வீடுகளிலேயே தொழுகை நடத்தி, ரமலான் பண்டிகை வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா்.
இதேபோல, கீழ்பென்னாத்தூா், வந்தவாசி, செய்யாறு, ஆரணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியா்கள் வீடுகளிலேயே ரமலான் தொழுகையில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...