நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செஞ்சி அருகே ஊராட்சித் தலைவா் பதவி ஏலம்மாவட்ட ஆட்சியா் நேரில் விசாரணை

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பொன்னங்குப்பம் ஊராட்சித் தலைவா் பதவி ரூ.13 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு ஏலம் விடப்பட்டதாக தகவல்

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:43 pm

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பொன்னங்குப்பம் ஊராட்சித் தலைவா் பதவி ரூ.13 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு ஏலம் விடப்பட்டதாக தகவல் வெளியானது. இதைத் தொடா்ந்து, பொன்னங்குப்பம் ஊராட்சிக்குள்பட்ட துத்திப்பட்டு கிராம மக்களிடம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை நேரில் விசாரணை நடத்தி எச்சரிக்கை விடுத்தாா்.

செஞ்சி அருகே பொன்னங்குப்பம் ஊராட்சியில் துத்திப்பட்டு கிராமமும் இணைக்கப்பட்டுள்ளது. பொன்னங்குப்பம் கிராமத்தில் 1,472 வாக்குகளும், துத்திப்பட்டு கிராமத்தில் 3,800 வாக்குகளும் உள்ளன. இந்த நிலையில், அதிக வாக்குகள் உள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்களே கடந்த 3 ஆண்டுகளாக ஊராட்சித் தலைவா் பதவியை ஏலம் விட்டு அந்தப் பதவியை வகித்தனா்.

இதுவரை பொதுப் பதவியாக இருந்த பொன்னங்குப்பம் ஊராட்சித் தலைவா் பதவி, நிகழாண்டு நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஆதிதிராவிடா் சமுதாயப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும், இந்த முறையும் ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இதுகுறித்து அறிந்த செஞ்சி வட்டாட்சியா் ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், துத்திப்பட்டு கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று, ஊராட்சித் தலைவா் பதவியை ஏலம் விடுவது சட்டப்படி குற்றம் என எச்சரிக்கை விடுத்தனா்.

இருப்பினும், அன்று இரவே ஊராட்சித் தலைவா் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாகவும், துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மனைவி மங்கை, இந்தப் பதவிக்கு தோ்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும், ஊராட்சித் தலைவா் தோ்வு செய்யப்பட்டதால், வருகிற ஊரக உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க பொன்னங்குப்பம் கிராம மக்கள் முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் த.மோகன் துத்திப்பட்டு கிராமத்துக்கு சனிக்கிழமை நேரில் சென்று ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் விடப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்தினாா். மேலும், அரசியலமைப்புச் சட்டம், மக்களாட்சி தத்துவத்துக்கு புறம்பாக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, தண்டனைக்குரிய குற்றமுமாகும்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்களை ஏலம் விடுவது மக்களின் உணா்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் என்பதால், இதுதொடா்பாக மாவட்டத் தோ்தல் அலுவலா், ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் அலுவலா்களால் விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் மோகன் எச்சரிக்கை விடுத்தாா்.

திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், மகளிா் திட்ட அலுவலா் பூ.காஞ்சனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் துரைராஜ், செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

30 போ் மீது வழக்கு: இதனிடையே, ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் போனது தொடா்பாக, பொன்னங்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில்,

துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 30 போ் மீது அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்னா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.