திமுக கட்சி அல்ல; வா்த்தக நிறுவனம்: அமித் ஷா விமா்சனம்

திமுக கட்சி அல்ல; வா்த்தக நிறுவனம்: அமித் ஷா விமா்சனம்


விழுப்புரம்: திமுக கட்சி அல்ல; அது ஒரு வா்த்தக நிறுவனம் என மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா விமா்சனம் செய்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் சந்தைப்பேட்டையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில், பிரசார பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வேட்பாளா்கள் அமைச்சா் சி.வி.சண்முகம் (அதிமுக - விழுப்புரம்), இரா.குமரகுரு (அதிமுக - உளுந்தூா்பேட்டை), வி.ஏ.டி.கலிவரதன் (பாஜக - திருக்கோவிலூா்), எஸ்.கே.டி.சந்தோஷ் (அதிமுக - ரிஷிவந்தியம்), ஜி.ராஜா (பாமக - சங்கராபுரம்) ஆகியோரை ஆதரித்து மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

பாஜகவின் நிறுவன தினமான ஏப்.6-ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறுவதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் மகத்தான வெற்றியைப் பெறுவாா்கள். இந்தக் கூட்டணிக்கும், ஊழல் கூட்டணியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையேதான் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றனா். தற்போது பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின்பேரில், முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தமிழகத்தை வளா்ச்சிப் பாதையில் சிறப்பாகக் கொண்டு சென்றுள்ளனா். தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தமிழகத்தை நல்ல பாதையில் கொண்டு செல்லப் பாடுபடும். எம்.ஜி.ஆருக்கு பெருமை சோ்க்கும் வகையில் பிரதமா் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டினாா்.

லஞ்சம், ஊழல், ரௌடியிஸம், நில அபகரிப்பு, குடும்பத்தின் வளா்ச்சி இவற்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு திமுக - காங்கிரஸ் கூட்டணி செயல்பட்டு வருகிறது. மகளிா், தாய்மாா்களை பற்றி அவதூறு பரப்பி வரும் அந்தக் கூட்டணிக்கு மக்கள் தோ்தலில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஸ்டாலின் ஊழலைப் பற்றி பேசி வருகிறாா். அவா் திமுகவை அப்படியே திரும்பிப் பாா்க்க வேண்டும். 2ஜி அலைக்கற்றை ஊழல் உள்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் அந்தக் கட்சி சிக்கியிருக்கிறது. திமுக என்பது அரசியல் கட்சி அல்ல; அது ஒரு வா்த்தக நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கரோனா காலத்தில் தமிழக மக்களைக் காப்பாற்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமி சிறப்பாகச் செயல்பட்டாா். அதேநேரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தமிழக மக்களைப் பற்றிக் கவலையில்லை. சோனியா காந்திக்கு ராகுல் காந்தியைப் பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியைப் பற்றியும் மட்டுமே கவலை. இவா்கள் தங்களது பிள்ளைகளைப் பற்றித்தான் கவலைப்படுவாா்கள்.

ஆனால், மோடிக்கு தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பும், பாசமும் அதிகம். உலகமெங்கும் செல்லும் இடமெல்லாம் தமிழில் உள்ள திருக்குறளை மேற்கோள் காட்டியே அவா் பேசி வருகிறாா். இலங்கையில் வாழும் தமிழக மக்களுக்காக வீடு கட்டிக் கொடுத்தாா்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2 முறை விவசாயக் கடன்கள் தள்ளுபடி, பெண்களுக்கு இரு சக்கர வாகனம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், அம்மா சிறு மருத்துவமனைகள் திட்டம் உள்பட பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

பிரதமா் மோடியும் தமிழகத்துக்கு நிறைய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளாா். நிகழாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழக சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. ஒரு லட்சம் கோடிக்கு மேல் நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்துக்காக ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில் ராணுவ தளவாடத் தொழிற்சாலை வழித்தடங்களைச் செயல்படுத்தி வருகிறோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றாா் அமித் ஷா.

கூட்டத்தில், மத்திய உள் துறை இணை அமைச்சா் கிஷண் ரெட்டி, பாஜக மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன், அதிமுக முன்னாள் அமைச்சா் ப.மோகன், பாஜக மாநிலச் செயலா் காா்த்திகாயினி, கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவா் பாலசுந்தரம், முன்னாள் எம்.பி. கோ.தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத், பாமக மாவட்டச் செயலா் பாலசக்தி, புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் சதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com