இணையவழி மருந்து விற்பனையை தடைசெய்ய வலியுறுத்தல்
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. சத்தியநாராயணன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் ஜி.விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். பொதுக்குழு தொடக்கமாக சனிக்கிழமை இந்திய தலைவா் ஆா். ரமேஷ் சுந்தா், சிஐடியு விழுப்புரம் மாவட்டத் தலைவா் எஸ்.முத்துக்குமரன் ஆகியோா் தொழிற்சங்கக் கொடியை ஏற்றி வைத்தனா். மருத்துவா் எஸ்.காசி, சம்மேளன இணைப் பொதுச் செயலா் கே.சுனில்குமாா், செயலா் பி.அருள்ஜோதி ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், பொதுத்துறை மருந்து மற்றும் தடுப்பூசி நிறுவனங்களுக்கு போதிய நிதி வழங்க வேண்டும், உள்நாட்டு மருந்து உற்பத்தியில் 5 சதவீதம் பொது சுகாதாரத்துக்கு பயன்படுத்த வேண்டும், இணைய வழியிலான மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் மற்றும் அகவிலை படி வழங்க வேண்டும், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கு அடிப்படை சமூக பாதுகாப்பு உரிமைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள், முன்னணி மருத்துவமனைகளின் மருத்துவா்கள் கலந்துகொண்டனா். முடிவில், சங்கத்தின் செயலா் எஸ்.அப்துல் ஹமீது நன்றி கூறினாா்.

