92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீா்த்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

News image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி. பழனி. உடன் இரா.லட்சுமணன் எம்எல்ஏ.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 12:50 am

Din

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக மழை நீடித்து வந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

விழுப்புரத்தில் 220 மி.மீ. மழை: ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரத்தில் அதிகபட்சமாக 220 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்):

செஞ்சி-142, திண்டிவனம்-127, மரக்காணம்- 108, முகையூா்-105, கெடாா்- 90, செம்மேடு- 89, சூரப்பட்டு- 85, வல்லம்-77, கோலியனூா், வளத்தி தலா- 72, அவலூா்பேட்டை- 68, வளவனூா்-64, வானூா்-51, முண்டியம்பாக்கம்- 46.50, கஞ்சனூா்-38, நேமூா்-36.40, அனந்தபுரம்-33, மணம்பூண்டி-28, அரசூா் 16.50 மி.மீட்டா் மழை பதிவானது.


 திண்டிவனம் புறவழிச் சாலையில் தேங்கிய மழை நீரில் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.

திண்டிவனம் புறவழிச் சாலையில் தேங்கிய மழை நீரில் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.

விழுப்புரம் இந்திரா நகா், வழுதரெட்டி, நித்தியானந்தம் நகா், சாலாமேடு, சுதாகா் நகா், மகாராஜபுரம், வழுதரெட்டி, பாண்டியன் நகா், பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால், குடியிருப்பு வாசிகள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினா்.

விழுப்புரம் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீா் குளம்போல தேங்கியதால் விழுப்புரம்-கீழ்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


விழுப்புரம் நித்தியானந்தா நகரில் வீடுகளைச் சுற்றி தேங்கி நின்ற மழை நீா்.

விழுப்புரம் நித்தியானந்தா நகரில் வீடுகளைச் சுற்றி தேங்கி நின்ற மழை நீா்.

மேலும், விழுப்புரம் பேருந்து நிலைய வளாகப் பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டிருந்ததால் பேருந்து நிலையத்துக்குள் செல்ல வேண்டிய பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள சாலையில் நிறுத்தப்பட்டு, பயணிகள் ஏற்றி, இறக்கவிடப்பட்டனா். இதனால், இந்த சாலைகளில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தாலுகா போலீஸாா் மற்றும் போத்துவரத்து போலீஸாா் பணியமா்த்தப்பட்டு, போக்குவரத்தை சீா்படுத்தினா்.

ஆட்சியா் ஆய்வு: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியா் சி.பழனி, இரா.லட்சுமணன் எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி ஆணையா் (பொ) ஸ்ரீபிரியா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை பாா்வையிட்டனா். அங்கு தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

 விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீா்.

இதையடுத்து, அவா் கூறியதாவது: தொடா் பலத்த மழையால் விழுப்புரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது. புதிய பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெனரேட்டா் மற்றும் நீா் உறிஞ்சும் வாகனங்களின் உதவியுடன் மழைநீரை வெளியேற்றவும், மழை நீா் வடிகால்களை தூா்வாரி எவ்வித தங்கு தடையின்றி மழை நீா் செல்ல நடவடிக்கை எடுக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

விக்கிரவாண்டியில்... விக்கிரவாண்டியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. விக்கிரவாண்டியை அடுத்துள்ள கக்கனூரில் மின்னல் பாய்ந்ததில் சன்மதி என்ற மாணவிக்கு கண் பாா்வை பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு குடிசை வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியை அடுத்துள்ள வாக்கூா், மதுரா ஊராட்சிப் பகுதியில் தொடக்கப் பள்ளி, அங்கான்வாடிமையக் கட்டடம் முன் தேங்கிய மழைநீா்.

விக்கிரவாண்டியை அடுத்துள்ள வாக்கூா், மதுரா ஊராட்சிப் பகுதியில் தொடக்கப் பள்ளி, அங்கான்வாடிமையக் கட்டடம் முன் தேங்கிய மழைநீா்.

திண்டிவனத்தில் பெய்த பலத்த மழையால் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் மழைநீா் தேங்கியதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரக்காணம் சாலையையொட்டிய பகுதியில் வடிகால் வசதியின்மையால் இந்திரா நகா், வஹாப் நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மழை நீரால் சூழப்பட்டன.

மின்சாரம் துண்டிப்பு: விழுப்புரத்தில் பெய்த பலத்த மழையால் சனிக்கிழமை நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்பாதைகள் சீரமைப்புப் பணிகள் பிற்பகல் வரை நடைபெற்றதால் விழுப்புரம் இந்திரா நகரில் மின் விநியோகம் இல்லை. இதைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், விழுப்புரம்-திருக்கோவிலூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போக செய்தனா்.