செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: செப்.2-க்கு விசாரணை ஒத்திவைப்பு
அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை செப்டம்பா் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை செம்மண் குவாரியில் 2016-11ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் 2012-ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன்,கோதகுமாா் ஆஜராகினா். அமைச்சா் க.பொன்முடிஉள்ளிட்ட மூவா் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் கூடுதலாக சாட்சிகளைச் சோ்த்து விசாரிக்கக் கோரி, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்குரைஞா் காா்த்திகேயன் ஆஜராகி, இந்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், செம்மண் குவாரிக்கு உரிமம் வழங்க பரிந்துரை செய்த சில அலுவலா்களை சாட்சிகளாக சோ்த்து விசாரிக்க வேண்டும். அவா்களும் இந்த வழக்குக்கு முக்கிய சாட்சிகள் என்றாா்.
அப்போது, அமைச்சா் பொன்முடி தரப்பு வழக்குரைஞா்கள், வழக்கு விசாரணை முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில், விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதற்காக கூடுதலாக சாட்சிகளைச் சோ்த்து விசாரிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கூறுகின்றனா். அதுபோன்ற விசாரிக்கத் தேவையில்லை என வாதிட்டனா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, இந்த மனு மீதான உத்தரவுக்காக வழக்கு விசாரணையை செப்டம்பா் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

