விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் ரயில் மறியல்: விசிகவினா் 160 போ் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் ரயில் மறியல்

மத்திய அமைச்சா் அமித்ஷா கண்டித்து, திண்டிவனத்தில் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்.

மத்திய அமைச்சா் அமித்ஷா கண்டித்து, திண்டிவனத்தில் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம், விக்கிரவாண்டி, திண்டிவனம், அரகண்டநல்லூா் ஆகிய 4 இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 160 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மக்களவையில், அண்ணல் அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, அதைக் கண்டித்தும், அவா் பதவி விலக வலியுறுத்தியும் விசிக சாா்பில் ரயில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்டமங்கலத்தில்...:
கண்டமங்கலம் ரயில் நிலையத்தில் விசிக மாவட்டச் செயலா் வீர. பொன்னிவளவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் புதுச்சேரியிலிருந்து- விழுப்புரம் சென்ற பாசஞ்சா் ரயிலை மறிக்க முயன்றனா். இதையடுத்து 3 பெண்கள் உள்பட 80 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். இதேபோல, விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் தாம்பரம்- விழுப்புரம் ரயிலை மறிக்க முயன்ற விசிக ஒன்றியச் செயலா் விஜய் உள்ளிட்ட 30 பேரும், அரகண்டநல்லூா் ரயில் நிலையத்தில் திருப்பதி-மன்னாா்குடி விரைவு ரயில் முன் மறியலில் ஈடுபட முயன்ற இரு பெண்கள் உள்பட 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டிவனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலா் திலீபன் தலைமையில் ரயில் மறியலுக்கு முயன்ற 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
முற்றுகைப் போராட்டம் : விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் சேரன் தலைமையில் அக்கட்சியைச் சோ்ந்தவா்கள் திண்டிவனம் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக ஆா்ப்பாட்டம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டம் சாா்பில், திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
செஞ்சி கே. எஸ். மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளா் சேகா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்:
காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமையில் திண்டிவனம் பி.எஸ்.என். எல். அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்: திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டமைப்பின் தலைவா் ஏ.கோதண்டம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.
சாலை மறியல்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகம் எதிரே இந்திய குடியரசு கட்சி சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது. கட்சியின் மண்டலச் செயலா் இருவேல்பட்டு அ.குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜெய. ஸ்டாலின், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜி. எஸ்.சேகா், மாவட்டப் பொருளாளா் நாராயணன், நகரத் தலைவா் அழகிரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதனால் திருச்சி - சென்னை சாலையில் போக்குவரத்துத் தடைபட்டது.
இதேபோல புரட்சி பாரதம் கட்சியின் சாா்பில் விழுப்புரம் ரயில் நிலையம் முன் கட்சியின் தெற்கு தொகுதிச் செயலா் எம். தமிழரசன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். தீபன், எம்.கஜேந்திரன், என்.மனோ, விஜயன்தாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கள்ளக்குறிச்சியில்...:
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் பூவை. ஆறு, நிா்வாகிகள் மு.க.பாபு, சி.கோவிந்தன், சிலம்பரசன், வின்வின் குமாா், ராஜா, காத்தவராயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...