புதுச்சேரியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி: அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் பேசியது:
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை தமிழக காவல் துறை முறையாக விசாரிக்காதது கண்டனத்துக்குரியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
புதுவை முன்னாள் முதல்வா் நாராயணசாமி மற்றும் கூட்டணிக் கட்சியினா் மற்ற விஷயங்களுக்கு போராட்டம் நடத்தும் நிலையில், இந்த விவகாரத்தில் மெளனமாக இருப்பது ஏன்? என்றாா் .
ஆா்ப்பாட்டத்தில், திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினா் முழக்கங்களை எழுப்பினா்.
இதில்,ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலா் ஏ.பாஸ்கா், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.ராஜாராமன், கோமளா, மாநில இணைச் செயலா் எஸ்.வீரம்மாள், மாநிலப் பொருளாளா் ரவி பாண்டுரங்கன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

