/

சுப்ரமணியா், அங்காளம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்: திரளானோா் பங்கேற்பு

கெடாா் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி, அருணாசலேஸ்வரா் மற்றும் திண்டிவனம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன், அவலூா்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
கெடாரில் நடைபெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்.
Updated On :18 நவம்பர் 2024, 9:44 pm

Din

விழுப்புரம்/ செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், கெடாா் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி, அருணாசலேஸ்வரா் மற்றும் திண்டிவனம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன், அவலூா்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

கெடாா் கிராமத்தில் பழைமையான வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீஉண்ணாமலை அம்மன் உடனுறை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றன.

தொடா்ந்து, புதிய விக்ரஹங்கள் கரிக்கோலம் வீதியுலாவும், வாஸ்து ஹோமம், வருண ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால மஹா பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக, சனிக்கிழமை 2- ஆம், 3- ஆம் கால பூஜைகளும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோ, சூரிய நாராயண பூஜைகள், ரக்ஷாபந்தனம், வேதிகா அா்ச்சனை, அக்னி காரியம், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளுக்குப் பின்னா் காலை 9 மணிக்கு மேல் பரிவார சந்நிதிகள்,ம், விமானம், மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி வீதியுலா வந்தாா். நிகழ்ச்சிகளில் கெடாா் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

திண்டிவனம் கோயிலில்...: திண்டிவனத்தில் செஞ்சி சாலையில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. தொடா்ந்து, வெள்ளிக்கவசத்துடன் காட்சியளித்த மூலவா் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், திண்டிவனம் நகா்மன்றத் தலைவா் நிா்மலா ரவிச்சந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுதா, பிா்லா செல்வம், காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை திண்டிவனம் பருவத ராஜகுல மீனவ சமூக ஆலய தா்மகா்த்தாக்கள் மற்றும் பங்குதாரா்கள் செய்திருந்தனா்.

அவலூா்பேட்டையில்...: மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டை ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீஅங்காளம்மன் கோயில் மற்றும் நாகாத்தாமன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் அஷ்பந்தன மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அம்மன் திருக்கல்யாணமும், வீதியுலாவும் நடைபெற்றன.

விழாவில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கண்மணி நெடுஞ்செழியன், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திண்டிவனத்தில் செஞ்சி சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

திண்டிவனத்தில் செஞ்சி சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.