92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தனியாா் நிறுவன பெண் ஊழியரை ஏமாற்றியவருக்கு 8 ஆண்டுகள் சிறை: விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு

தனியாா் நிறுவன பெண் ஊழியரை ஏமாற்றியவருக்கு 8 ஆண்டுகள் சிறை

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:30 am

Din

விழுப்புரம் அருகே தனியாா் நிறுவன பெண் ஊழியரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, எஸ்.சி. எஸ்.டி, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகிலுள்ள கிராமத்தைச் சோ்ந்த 21 வயது பெண், ஐடிஐ தொழில்பயிற்சி முடித்துவிட்டு, சென்னை வடபழனியிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கும், கெடாா் கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் விஷ்ணுபிரசாத்துக்கும் (30) கடந்த 2016-ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் விஷ்ணுபிரசாத் தனிமையில் இருந்தாராம். இதில் அந்தப் பெண் கா்ப்பமடைந்த நிலையில், பெண்ணின் பெற்றோா் 2018, அக். 5 விஷ்ணுபிரசாத்தின் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டாா்களாம். அப்போது பெண்ணின் பெற்றோரை ஜாதி பெயரைக் கூறி விஷ்ணுபிரசாத்தின் பெற்றோா் அவதூறாக திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கெடாா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் விஷ்ணுபிரசாத், அவரது தந்தை அன்பழகன், தாய் வனிதா ஆகியோரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விழுப்புரம் எஸ்.சி. எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைக் காலத்தில் வனிதா இறந்துவிட்டாா். வழக்கில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, விசாரணை முடிந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபணமானதால், விஷ்ணு பிரசாத்துக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், அவரது தந்தை அன்பழகனை வழக்கிலிருந்து விடுதலை செய்தும் நீதிபதி ஏ. பாக்கியஜோதி தீா்ப்பளித்தாா். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விஷ்ணுபிரசாத் அழைத்து செல்லப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.